கன்னியாகுமரி பகுதியில் திடீர் நிலநடுக்கம்


கன்னியாகுமரி பகுதியில் திடீர் நிலநடுக்கம்
x
தினத்தந்தி 29 April 2021 11:36 PM IST (Updated: 29 April 2021 11:36 PM IST)
t-max-icont-min-icon

கன்னியாகுமரி பகுதியில் நேற்று மாலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. வீடுகள் குலுங்கியதால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளுக்கு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கன்னியாகுமரி, 
கன்னியாகுமரி பகுதியில் நேற்று மாலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. வீடுகள் குலுங்கியதால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளுக்கு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
நிலநடுக்கம்
கன்னியாகுமரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலையில் பொதுமக்கள் வழக்கம் போல் தங்களது அன்றாட பணிகளை கவனித்து கொண்டிருந்தனர். மாலை 3.45 மணியளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. வீட்டின் சுவர்கள் அதிர்ந்தன. அத்துடன் சுவர் இடிவது போன்று சத்தம் கேட்டது. சமையல் அறையில் இருந்த பாத்திரங்கள் உருண்டு சர சரவென கீழே விழுந்தன. கட்டிலில் படுத்து இருந்தவர்கள், நாற்காலியில் அமந்திருந்தவர்கள் நிலைதடுமாறி கீழே விழுந்தனர்.  
இதனால், அச்சமடைந்த பொதுமக்கள் வீடுகளில் இருந்து வெளியேறி வீதிகளுக்கு வந்தனர். ஓட்டலில் வேலை செய்து கொண்டிருந்தவர்கள், கடைகளில் வியாபாரத்தை கவனித்து கொண்டிருந்தவர்கள் என அனைவரும் அலறியடித்து கொண்டு வெளியே ஓடினர். இந்த அதிர்வு சுமார் 5 வினாடிகள் நீடித்தது.
கனவு போல் தோன்றியது
திடீரென ஏற்பட்ட இந்த அதிர்வால் என்னவோ ஏதோ  என்று பொதுமக்கள் குழம்பினர். தங்கள் பகுதியில் மட்டும் தான் இந்த மாற்றம் ஏற்பட்டதாக நினைத்தனர். தொடர்ந்து பக்கத்து ஊரில் உள்ளவர்களிடம் தொடர்பு கொண்டு பேசிய போது அங்கும் இத்தகைய அதிர்வு ஏற்பட்டிருப்பதை அறிந்தனர். அப்போது தான் தங்கள் பகுதி முழுவதும்  நிலநடுக்கம் ஏற்பட்டதை அறிந்து அச்சம் அடைந்தனர்.
இதுகுறித்து கன்னியாகுமரி தூய அலங்கார உபகாரமாதா திருத்தல பங்குபேரவை துணைத்தலைவர் நாஞ்சில் மைக்கேல் கூறுகையில், நான் வீட்டில் கட்டிலில் படுத்து இருந்த போது திடீரென வீட்டின் சுவர்கள் குலுங்கின. அத்துடன் கட்டில் அங்கும், இங்கும் ஆடியது. நானும் ஏதோ கனவுதான் காண்பதாக நினைத்தேன். அப்போது, வீட்டில் இருந்த மனைவி மற்றும் உறவினர்கள் நில நடுக்கம் ஏற்பட்டதாக அலறிய நிலையில் என்னை எழுப்பி விட்டு, வீட்டில் இருந்து வெளியேறினர். உடனே நானும் கட்டிலில் இருந்து எழுந்து வீட்டை விட்டு வெளியேறினேன் என்றார்.
அகதிகள் முகாம்
கொட்டாரம் பெருமாள்புரம் இலங்கை அகதிகள் முகாமில் இருந்தவர்களும் இந்த அதிர்வை உணர்ந்தனர். இதுகுறித்து அகதிகள் முகாமை சேர்ந்த மூர்த்தி கூறுகையில், நான் மாலையில் வீட்டில் அமர்ந்து உணவு சாப்பிட்டு கொண்டிருந்தேன். அப்போது, திடீரென வீட்டின் சுவர்கள் குலுங்கின. உயரமான இடத்தில் இருந்த பொருட்கள் கீழே விழுந்தன. இதனால், அச்சமடைந்த நானும் வீட்டில் இருந்த அனைவரும் வெளியேறி வீதிக்கு வந்தோம். அப்போது இதுபோல் பக்கத்து வீட்டில் இருந்தவர்களும் அச்சத்தில் வீதிக்கு வந்தனர். இந்த திடீர் அதிர்வால் அச்சமடைந்து வீடுகளுக்கு செல்லாமல் சுமார் ½ மணி நேரத்திற்கு மேலாக வீதியிலேயே நின்றோம் என்றார்.
பூமிக்குள் ‘வெடி’ சத்தம் 
அஞ்சுகிராமம் ஜேம்ஸ் டவுன் பகுதியை சேர்ந்த வசந்தா என்பவர் கூறுகையில், நான் மாலையில் 3.45 மணியளவில் வீட்டின் வெளியே நாற்காலியில் அமர்ந்திருந்தேன். அப்போது பூமிக்குள் ‘வெடி’ வெடிப்பது போன்ற சத்தம் கேட்டது. அத்துடன் வீட்டின் சுவர், நான் அமர்ந்திருந்த நாற்காலி போன்றவை அதிர்ந்தன. இதில் நான் நிலைதடுமாறி கீழே விழுந்தேன். அதிர்ஷ்டவசமாக எனக்கு காயம் ஏதுவும் ஏற்படவில்லை. ஆனாலும், அச்சத்தில் உறைந்து போன நான், சாலைக்கு ஓடி வந்தேன் என்றார்.
அதே பகுதியை சேர்ந்த 9-வது சிறுமி நிஷாமோள் கூறுகையில், நான் நேற்று மாலையில் மாடியில் கட்டிலில் படுத்து இருந்தேன். அப்போது, திடீரென பயங்கர சத்தம் கேட்டது. அத்துடன் நான் படுத்து இருந்த கட்டில் அதிர தொடங்கியது. இதனால், அச்சமடைந்த நான் ‘அம்மா..’ என அலறியடித்து கொண்டு எழும்ப ஓட முயன்றேன். அதற்குள் நிலைதடுமாறி கட்டிலில் இருந்து கீழே விழுந்தேன். இதற்கிடையே வீட்டில் இருந்த பெற்றோர் ஓடி வந்து என்னை அரவணைத்து கொண்டனர். பின்னர் அனைவரும் வீட்டை விட்டு வெளியேறி சாலைக்கு வந்தோம் என்றாள்.
நாகர்கோவில் ராமன்புதூர் செயின்ட் மேரீஸ் தெருவை சேர்ந்த ஆசிரியர் தியாகராஜன் கூறுகையில், நான் நேற்று மாலை வீட்டில் டி.வி. பார்த்துக் கொண்டிருந்த போது கதவு திடீரென பட பட வென அடித்து சுவரோடு ஒட்டி போய் நின்றது. வீட்டுக்குள் அதிர்வுகள் ஏற்பட்டதையும் உணர்ந்தேன். இதனால் நிலநடுக்கம் ஏற்பட்டதோ என நினைத்து குடும்பத்தினரை திறந்தவெளி மைதானத்திற்கு அழைத்துச் செல்ல முயன்றேன். அதற்குள் நிலஅதிர்வு தணிந்து சகஜ நிலை திரும்பியது. இதுபோல் பக்கத்து வீட்டில் உள்ளவர்களும் லேசான நில அதிர்வை உணர்ந்ததாக  தெரிவித்த      னர், என்றார். 
மீனவ கிராமங்களில்
இதுபோல், சின்னமுட்டம், ஆரோக்கியபுரம் போன்ற மீனவ கிராமங்களிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது. மேலும் நாகர்கோவில், பொன்னப்ப நாடார் காலனி, புன்னைநகர், வெட்டூர்ணிமடம்,  ஆரல்வாய்மொழி, தோவாளை, அழகப்பபுரம் போன்ற பகுதியிலும் நில அதிர்வை உணர்ந்ததாக அந்த பகுதி மக்கள் கூறினர். இதனால் அந்த பகுதியில் உள்ள மக்கள் அனைவரும் அச்சத்தில் உறைந்தனர். 

Next Story