அ.தி.மு.க. கவுன்சிலர் படுகொலை வழக்கில் கூலிப்படையினர் 7 பேர் கைது


அ.தி.மு.க. கவுன்சிலர் படுகொலை வழக்கில் கூலிப்படையினர் 7 பேர் கைது
x
தினத்தந்தி 30 April 2021 12:01 AM IST (Updated: 30 April 2021 12:01 AM IST)
t-max-icont-min-icon

முத்துப்பேட்டை அருகே நடந்த அ.தி.மு.க. கவுன்சிலர் படுகொலை வழக்கில் கூலிப்படையினர் 7 பேரை போலீசார் கைது செய்தனர். ைகதானவர்களிடம் இருந்து கார், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் கைத்துப்பாக்கி-நாட்டு வெடிகுண்டுகள் ஆகியவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

முத்துப்பேட்டை:
முத்துப்பேட்டை அருகே நடந்த அ.தி.மு.க. கவுன்சிலர் படுகொலை வழக்கில் கூலிப்படையினர் 7 பேரை போலீசார் கைது செய்தனர். ைகதானவர்களிடம் இருந்து கார், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் கைத்துப்பாக்கி-நாட்டு வெடிகுண்டுகள் ஆகியவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
அ.தி.மு.க. கவுன்சிலர் படுகொலை
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே உள்ள கோவிலூர் மணல்மேடு பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ்(வயது 38). முத்துப்பேட்டை ஊராட்சி ஒன்றிய அ.தி.மு.க. கவுன்சிலராக இருந்து வந்த இவர், கடந்த பிப்ரவரி மாதம் 22-ந் தேதி வீட்டில் இருந்து புறப்பட்டு ஆசாத் நகர் வழியாக மோட்டார் சைக்கிளில் ஆலங்காடு சென்று கொண்டு இருந்தார். 
வழியில் உள்ள பேரூராட்சி குப்பைக்கிடங்கு அருகே அவரை ஒரு கும்பல் வழிமறித்தது. அங்கிருந்து தப்பிய ராஜேசை மோட்டார் சைக்கிள் மற்றும் காரில் விடாமல் துரத்தி சென்ற கும்பல் ஆலங்காடு அருகே மடக்கியது. பின்னர் அரிவாளால் அவரது தலையை துண்டித்து கொலை செய்தது. பின்னர் துண்டித்த தலையை துணியில் சுற்றி எடுத்துச்சென்று முத்துப்பேட்டை ஆசாத் நகர் பகுதியில் வீசிவிட்டு தப்பிச்சென்றனர்.
2 தனிப்படைகள்  அமைப்பு
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் ராஜேசின் தலை மற்றும் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருத்துறைப்பூண்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை தொடர்பாக சந்திரமோகன் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் அ.ம.மு.க. பிரமுகர் ஜெகன், செந்தில்ராஜா, யோகேஸ்வரன், அருண்குமார், ஆனந்த் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வந்தது. இந்த நிலையில் இந்த கொலை வழக்கில் உண்மையான குற்றவாளிகளை கண்டறிய முத்துப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தூர்பாண்டியன், மாவட்ட குற்றப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் ராஜா ஆகியோர் தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வந்தது.
கூலிப்படையினர் 7 பேர் கைது
போலீசாரின் தீவிர விசாரணையில் தூத்துக்குடி, நெல்லை பகுதியை சேர்ந்த கூலிப்படையினர் இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளது தெரிய வந்தது. இதனைத்தொடர்ந்து போலீசார் அங்கு சென்று ஒருவாரம் முகாமிட்டு கொலையாளிகளை தேடி வந்தனர். 
இந்த கொலை தொடர்பாக நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தை சேர்ந்த முருகன் மகன் சின்னத்துரை(வயது 28), தூத்துக்குடி மாவட்டம் இலுப்பைக்குளம் கூல்பாண்டி மகன் கொம்பைய்யா(26), வெல்லூர் கருப்பசாமி மகன் முத்துக்குமார்(28), பொன்னேரிகுறிச்சி முத்துபலவேசம் மகன் வன்னிமுத்து என்கிற பாண்டி(26), ஆதித்யநல்லூர் மாரியப்பன் மகன் இசக்கிமுத்து என்கிற போஸ்(24), நெல்லை பேட்டையை சேர்ந்த  சண்முகவேல் மகன் நாகராஜன் என்கிற நாகு(26), தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டை அடுத்த சேதுராயன்குடிகாட்டை சேர்ந்த வீரமணி(46) ஆகிய 7 பேரை கைது செய்தனர்.
கைத்துப்பாக்கி-நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல்
கைதானவர்களிடம் இருந்து ஒரு கார், 4 மோட்டார் சைக்கிள்கள் மற்றும், கொலைக்கு பயன்படுத்தப்பட்ட அரிவாள்கள், சிறிய கைத்துப்பாக்கி, நாட்டு வெடிகுண்டுகள் ஆகியவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர். 
பின்னர் அனைவரையும் திருத்துறைப்பூண்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் சிறப்பாக செயல்பட்ட தனிப்படை போலீசாருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கயல்விழி பாராட்டு தெரிவித்தார்.

Next Story