முகவர்கள், வாக்கு எண்ணும் அலுவலர்களுக்கு கொரோனா பரிசோதனை
முகவர்கள், வாக்கு எண்ணும் அலுவலர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
கரூர்
சான்றிதழ் கட்டாயம்
தமிழக சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் வருகிற 2-ந் தேதி(ஞாயிற்றுக்கிழமை) எண்ணப்படுகிறது. வாக்கு எண்ணிக்கையின் போது வேட்பாளர்கள், அவர்களது முகவர்கள், வாக்கு எண்ணும் அலுவலர்கள் ஆகியோர் கொரோனா முதல் தவணை தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் அல்லது ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை செய்து தொற்று இல்லை என்பதற்கான சான்று வைத்திருக்க வேண்டும். கொரோனா இல்லை என்பதற்கான சான்றிதழை சமர்ப்பித்தால் மட்டுமே வாக்கு எண்ணும் மையத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் அரவக்குறிச்சி தொகுதிக்கு அரவக்குறிச்சி வட்டாட்சியர் அலுவலகம், க.பரமத்தி மற்றும் அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களிலும், கரூர் சட்டமன்ற தொகுதிக்கு கரூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகங்களிலும், கிருஷ்ணராயபுரம் (தனி) சட்டமன்ற தொகுதிக்கு கடவூர் மற்றும் கிருஷ்ணராயபுரம் வட்டாட்சியர் அலுவலகங்களிலும், கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், குளித்தலை சட்டமன்ற தொகுதிக்கு குளித்தலை சார் ஆட்சியர் அலுவலகம், அண்ணா சமுதாய மன்றம் மற்றும் தோகைமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும் சிறப்பு பரிசோதனை முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
பரிசோதனை
அந்தவகையில் நேற்று கரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கரூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் மற்றும் கரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் காலை 10 மணி முதல் கொரோனா பரிசோதனை முகாம் நடைபெற்றது. இதில் வாக்கு எண்ணும் அலுவலர்கள், முகவர்கள் பரிசோதனை செய்து கொண்டனர். நேற்று நடைபெற்ற சிறப்பு பரிசோதனை முகாமில் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியை பொறுத்தவரை மொத்தமுள்ள 600 முகவர்களில், 250 பேர் ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனையும், 5 பேர் கொரோனா தடுப்பூசியும் போட்டுக் கொண்டனர். 549 வாக்கு எண்ணும் அலுவலர்களில், 202 பேர் ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனையும், 35 பேர் கொரோனா தடுப்பூசியும் போட்டுக் கொண்டனர்.
கரூர் சட்டமன்ற தொகுதியை பொறுத்தவரை மொத்தமுள்ள 1,848 முகவர்களில், 232 பேர் ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனையும், 79 பேர் கொரோனா தடுப்பூசியும் செலுத்திக் கொண்டனர். 636 வாக்கு எண்ணும் அலுவலர்களில், 410 பேர் ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனையும், 64 பேர் கொரோனா தடுப்பூசியும் எடுத்து கொண்டனர். கிருஷ்ணராயபுரம் (தனி) சட்டமன்ற தொகுதியை பொறுத்தவரை மொத்தமுள்ள 494 முகவர்களில், 349 பேர் ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனையும், 3 பேர் கொரோனா தடுப்பூசியும் போட்டுக் கொண்டனர். 539 வாக்கு எண்ணும் அலுவலர்களில் 97 பேர் ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனையும், 14 பேர் கொரோனா தடுப்பூசியும் போட்டுக் கொண்டனர்.
குளித்தலை
குளித்தலை சட்டமன்ற தொகுதியை பொறுத்தவரை மொத்தமுள்ள 342 முகவர்களில் 197 பேர் ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனையும், 7 பேர் கொரோனா தடுப்பூசியும் போட்டுக் கொண்டனர். 539 வாக்கு எண்ணும் அலுவலர்களில் 44 பேர் ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனையும், 17 பேர் கொரோனா தடுப்பூசியும் போட்டுக் கொண்டனர்.
கரூர் மாவட்டத்தில் 4 சட்டமன்ற தொகுதிகளில் மொத்தம் 3,284 முகவர்களில் 1,028 பேர் ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனையும், 94 பேர் கொரோனா தடுப்பூசியும் செலுத்திக் கொண்டனர். 2,263 வாக்கு எண்ணும் முகவர்களில் 753 பேர் ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனையும், 130 பேர் கொரோனா தடுப்பூசியும் செலுத்திக் கொண்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குளித்தலையில் உதவி கலெக்டர் அலுவலக வளாகம் மற்றும் அண்ணா சமுதாய மன்றம் ஆகிய 2 இடங்களில் கொரோனா பரிசோதனை முகாம் நேற்று தொடங்கியது. இந்த முகாம் இன்றும், நாளையும் என 3 நாட்கள் நடைபெற உள்ளது.
Related Tags :
Next Story