கொரோனா தடுப்பூசி மையம் அரசு கலைக்கல்லூரிக்கு மாற்றம்
கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் கோவை அரசு ஆஸ்பத்திரியில் செயல்பட்ட தடுப்பூசி மையம், அரசு கலைக்கல்லூரிக்கு மாற்றப்பட்டுள்ளது.
கோவை,
கொரோனா தொற்றில் இருந்து பொதுமக்களை காக்கும் வகையில் இந்தியாவில் கோவேக்சின், கோவிஷீல்டு ஆகிய தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன.
அதன்படி கோவை அரசு ஆஸ்பத்திரியில் கடந்த ஜனவரி மாதம் 16-ந் தேதி முதல் கொரோனா தடுப்பூசி மையம் தொடங்கப்பட்டது. முதலில் முன்களப்பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
2-ம் கட்டமாக கடந்த மாதம் 1-ந் தேதி முதல் 45 வயதுக்கு மேற்பட்ட வர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. தற்போது கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று மின்னல் வேகத்தில் பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கோவை அரசு ஆஸ்பத்திரியில் 500-க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும் இங்கு தடுப்பூசி போட தினமும் ஆயிரக்கணக்கானவர்கள் வரு கிறார்கள். 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நாளை (சனிக்கிழமை) தொடங்க உள்ளது.
இங்கு, கொரோனா நோயாளிகள் இருக்கும் நிலையில், தடுப்பூசி செலுத்திக் கொள்ள வரும் பொதுமக்களுக்கு தொற்று பரவும் அபாயம் உள்ளது.
எனவே கோவை அரசு ஆஸ்பத்திரியில் செயல்படும் கொரோனா தடுப்பூசி மையத்தை, கோவை அரசு கலைக்கல்லூரிக்கு மாற்ற பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது.
இது குறித்து கோவை அரசு ஆஸ்பத்திரி டீன் நிர்மலா கூறியதாவது
கோவை அரசு ஆஸ்பத்திரி புதிய கட்டிடம் 4-வது மாடியில் கொரோ னா தடுப்பூசி போடும் பணியும் நடந்து வருகிறது.
இதுவரை மொத்தம் 38,254 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. இங்கு கொரோனா நோயாளிகள் அதிகம் இருப்பதால் மற்றவர்களுக்கு பரவக் கூடாது என்பதற்காக அரசு கலைக்கல்லூரிக்கு கொரோனா தடுப்பூசி மையம் மாற்றப்படுகிறது.
அங்கு ஒவ்வொரு அறையிலும் தலா ஒரு அவசர சிகிச்சைக்கான ஆக்சிஜன் வசதியுடனான படுக்கை, தடுப்பூசி செலுத்தியவர்களை கண்காணிக்கும் அறை போன்றவை அமைக்கப்படுகிறது.
கூடுதலாக 2 நர்சுகள் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இந்த மையம் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் செயல்படும். 1-ந் தேதியில் இருந்து முழுமையாக செயல்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story