கைதி கொலைக்கு நீதி கேட்டு போராட்டம்: நெல்லையில் சாலை மறியலில் ஈடுபட்ட 19 பேர் கைது
நெல்லையில் கைதி கொலைக்கு நீதி கேட்டு சாலை மறியலில் ஈடுபட்ட 19 பேரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை, ஏப்:
நெல்லையில் கைதி கொலைக்கு நீதி கேட்டு சாலை மறியலில் ஈடுபட்ட 19 பேரை போலீசார் கைது செய்தனர். அப்போது போலீசாருடன் வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.
கைதி கொலை
நெல்லை அருகே உள்ள மூன்றடைப்பு வாகைகுளம் கிராமத்தை சேர்ந்த பாவநாசம் மகன் முத்து மனோ (வயது 27). இவரை களக்காடு பகுதியில் பிளஸ்-2 மாணவரை கொலை செய்ய முயன்ற வழக்கில் போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில் பாளையங்கோட்டை சிறையில் முத்துமனோவை கைதிகள் சிலர் கும்பலாக சேர்ந்து அடித்துக் கொலை செய்தனர்.
இதுதொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. துணை போலீஸ் சூப்பிரண்டு அனில்குமார், சம்பந்தப்பட்ட கைதிகள் மீது வழக்குப்பதிவு செய்து நேற்று முன்தினம் பாளையங்கோட்டை மத்திய சிறைக்கு சென்று விசாரணை நடத்தினார். நேற்று 2-வது நாளாக விசாரணை நடைபெற்றது.
சாலை மறியல்
இதற்கிடையே, தமிழர் உரிமை மீட்பு களம் சார்பில் நேற்று பாளையங்கோட்டையில் திடீர் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. பாளையங்கோட்டை பஸ் நிலையம் அருகே திருவனந்தபுரம் ரோட்டில் அந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் லெனின் தலைமையில் இளைஞர்கள் திரண்டனர். பின்னர் அவர்கள் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்கள், முத்துமனோ கொலை குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும், அவரது குடும்பத்தினருக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும், சிறை அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
வாக்குவாதம்
இதை அறிந்த போலீசார் அங்கு விரைந்து வந்து அவர்களை அப்புறப்படுத்தினர். அப்போது அவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.
இதையடுத்து மறியலில் ஈடுபட்ட 19 பேரை போலீசார் கைது செய்தனர்.
உறவினர்கள் போராட்டம்
இந்த நிலையில் முத்துமனோவின் கொலைக்கு காரணமான சிறை அதிகாரிகள் மீது கொலை வழக்குப்பதிவு செய்ய வேண்டும். அவர்களை பணி நீக்கம் செய்திட துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அவரது உறவினர்கள், வாகைக்குளம் ஊர் மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அவர்களின் போராட்டம் நேற்று 7-வது நாளாக நீடித்தது. தங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் வரை முத்துமனோவின் உடலை பெறப்போவது இல்லை என்று அவர்கள் கூறினர். இந்த போராட்டத்ைதயொட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
Related Tags :
Next Story