கட்சி முகவர்கள், அரசு அலுவலர்களுக்கு கொரோனா பரிசோதனை
கட்சி முகவர்கள், அரசு அலுவலர்களுக்கு கொரோனா பரிசோதனை
மதுரை
கொரோனா வேகமாக பரவி வருவதையொட்டி கொரோனா கால விதிமுறைகளை முறையாக கடைபிடித்து வாக்கு எண்ணிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. அதன்படி தேர்தல் ஆணையம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையத்துக்குள் செல்லும் அரசு அலுவலர்கள், ஊழியர்கள், பாதுகாப்பு பணியில் ஈடுபடக் கூடிய போலீசார், வாக்கு எண்ணும் மையத்துக்குள் செல்லக் கூடிய அரசியல் கட்சி முகவர்கள், வேட்பாளர்கள் என அனைவரும் கொரோனா தொற்று இல்லை என்ற சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் அல்லது 2 கட்டங்களாக கொரோனா தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழை காண்பிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதனால் கொரோனா பரிசோதனை செய்து கொள்வதற்காக கட்சி பிரமுகர்கள் மாவட்ட மற்றும் மாநகராட்சி நிர்வாகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கொரோனா பரிசோதனை முகாம்களில் முகாமிட்டுள்ளனர். மேலும் பரிசோதனை மையங்களில் அரசு அலுவலர்கள், ஊழியர்கள், போலீசார், வாக்குச்சாவடி முகவர்கள் என ஏராளமானோர் நீண்டவரிசையில் நின்றபடி கொரோனா பரிசோதனை செய்து வருகின்றனர். இவர்களிடம் இருந்து எடுக்கப்படும் சளி மாதிரிகள் மதுரை அரசு மருத்துவ கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இன்று அல்லது நாளை அவர்களுக்கான பரிசோதனை முடிவுகள் தெரியவரும் என டாக்டர்கள் தெரிவித்தனர்.
நேற்று ஒரே நாளில் 10 ஆயிரத்து 279 பேரிடம் இருந்து சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு உள்ளது. மதுரையில் இதுவரை நடத்தப்பட்ட பரிசோதனையில் இதுவே அதிகம். நேற்றுடன் மதுரையில் இதுவரை 9 லட்சத்து 72 ஆயிரத்து 751 நபர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story