நூதனமுறையில் ரூ.4½ லட்சம், 25 பவுன் நகைகளை மோசடி செய்த பெண் கைது
நூதனமுறையில் ரூ.4½ லட்சம், 25 பவுன் நகைகளை மோசடி செய்த பெண் கைது செய்யப்பட்டார்
மதுரை
மதுரை எச்.எம்.எஸ்.காலனி பகுதியை சேர்ந்தவர் முருகம்பாள்(வயது 38). இவருக்கு அதே பகுதியை சேர்ந்த இந்திரா என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. அப்போது இந்திரா, தனது கணவருக்கு புற்றுநோய் உள்ளது. அவருக்கு சிகிச்சை அளிக்க ரூ.10 லட்சம் தேவைப்படுகிறது. நீங்கள் பணம் கொடுத்து உதவினால் எனது கணவரை காப்பாற்றி விடலாம் என்று முருகம்பாளிடம் கேட்டுள்ளார். அதனை நம்பிய அவர் தன்னிடம் இருந்த பணம் மற்றும் உறவினர்கள் என பலரிடம் கடன் வாங்கி 4½ லட்சம் ரூபாயை கொடுத்துள்ளார். அதனை பெற்று கொண்ட இந்திரா இந்த பணம் சிகிச்சைக்கு போதாது என்று அவரிடம் கூறி அழுது புலம்பி உள்ளார். மேலும் உங்களிடம் நகை இருந்தால் அதை கொடுங்கள், அதனை அடகு வைத்து பணத்தை பெற்றுக் கொள்கிறேன். நீங்கள் கேட்கும் போது அந்த நகை மற்றும் பணத்தை திருப்பி கொடுத்து விடுவதாக கூறினார். அதை நம்பி முருகம்பாள் தன்னிடம் இருந்த 25 பவுன் நகைகளை அவரிடம் கொடுத்துள்ளார். அதனை பெற்று கொண்ட இந்திரா பல மாதங்கள் ஆகியும் பணத்தையும், நகையையும் திருப்பி தரவில்லை. இது குறித்து கேட்டபோது அவருக்கு கொலை மிரட்டல் விடுத்தார். எனவே முருகம்பாள் இதுகுறித்து எஸ்.எஸ்.காலனி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் இந்திரா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் இது போன்று அவர் பலரிடம் கூறி பணத்தை மோசடி செய்தது தெரியவந்தது. அதை தொடர்ந்து போலீசார் இந்திராவை கைது செய்தனர்.
Related Tags :
Next Story