வாக்கு எண்ணிக்கையில் திண்டுக்கல்லில் ஈடுபடும் அலுவலர்களுக்கு கொரோனா பரிசோதனை


வாக்கு எண்ணிக்கையில் திண்டுக்கல்லில் ஈடுபடும் அலுவலர்களுக்கு கொரோனா பரிசோதனை
x
தினத்தந்தி 30 April 2021 1:42 AM IST (Updated: 30 April 2021 1:42 AM IST)
t-max-icont-min-icon

சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபட இருக்கும் அலுவலர்கள் மற்றும் முகவர்களுக்கு நேற்று கொரோனா பரிசோதனை நடந்தது.

திண்டுக்கல்:
சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபட இருக்கும் அலுவலர்கள் மற்றும் முகவர்களுக்கு நேற்று கொரோனா பரிசோதனை நடந்தது. 
வாக்கு எண்ணிக்கை 
தமிழக சட்டமன்ற தேர்தல் கடந்த 6-ந்தேதி நடைபெற்றது. இதைத் தொடர்ந்து நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கிறது. திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை 7 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த 7 தொகுதிகளிலும் பதிவான வாக்குகள், ரெட்டியார்சத்திரம் அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் எண்ணப்படுகிறது.
இதையொட்டி வாக்கு எண்ணும் மையத்தில் அனைத்து ஏற்பாடுகளும் தீவிரமாக நடக்கின்றன. ஒவ்வொரு தொகுதிக்கும் வாக்கு எண்ணுவதற்கு தலா 14 மேஜைகள் அமைக்கப்படுகின்றன. இதில் ஒவ்வொரு மேஜைக்கும் தலா 5 பேர் பணியில் ஈடுபடுவார்கள். இதுதவிர தபால் வாக்குகளை எண்ணுவதற்கு 4 மேஜைகள் அமைக்கப்படுகின்றன. இதற்கு தனியாக அலுவலர்கள் நியமிக்கப்படுகின்றனர்.
அலுவலர்கள், முகவர்கள் 
மேலும் வாக்குப்பதிவு எந்திரங்களை பாதுகாப்பு அறையில் இருந்து எடுத்து வருதல் உள்பட பல்வேறு பணிகளுக்கு என மொத்தம் 1,200 அலுவலர்கள் நியமிக்கப்பட உள்ளனர். அதேபோல் வாக்கு எண்ணும் மையத்துக்குள் 500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். இதுதவிர வாக்கு எண்ணிக்கையின் போது வேட்பாளர்கள், முகவர்கள் சுமார் 600 பேர் வருவார்கள்.
எனவே, வாக்கு எண்ணிக்கையின் போது 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மையத்துக்குள் இருப்பார்கள். இதனால் வாக்கு எண்ணும் மையத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கட்டாயம் மேற்கொள்ளும்படி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதையொட்டி சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் மேஜைகள் அமைக்கப்பட்டு, இதர ஏற்பாடுகள் நடக்கின்றன.
அனைவரும் முககவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டு இருக்கிறது. இதற்கிடையே வாக்கு எண்ணிக்கையில் ஈடுபடும் அலுவலர்கள், அதை பார்வையிட வரும் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள், பாதுகாப்புக்கு நியமிக்கப்படும் போலீசார் என அனைவரும் 2 முறை (டோஸ்) தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும்.
கொரோனா பரிசோதனை 
அவ்வாறு 2 முறை தடுப்பூசி போட்டு கொள்ளாதவர்கள் கொரோனா பரிசோதனை செய்து தொற்று இல்லை என்ற சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் என்று கலெக்டர் விஜயலட்சுமி உத்தரவிட்டார். இதையடுத்து நேற்று 7 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள், முகவர்களுக்கு அந்தந்த தொகுதியில் கொரோனா பரிசோதனை முகாம் நடந்தது.
இதுதவிர வாக்கு எண்ணிக்கையில் ஈடுபடும் அலுவலர்களுக்கு, கலெக்டர் அலுவலகத்தில் கொரோனா பரிசோதனை முகாம் நடந்தது. இதில் தடுப்பூசி செலுத்தாதவர்கள், ஒருமுறை மட்டுமே தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள் ஆர்வமுடன் வந்து பரிசோதனை செய்து கொண்டனர்.
இந்த பரிசோதனை முடிவு இன்று (வெள்ளிக்கிழமை) மாலை வெளியாகும். அதில் கொரோனா தொற்று இல்லாதவர்கள் மட்டுமே வாக்கு எண்ணும் மையத்துக்குள் அனுமதிக்கப்பட உள்ளனர். அதேநேரம் போலீசார் அனைவரும் 2 முறை தடுப்பூசி செலுத்தி கொண்டது குறிப்பிடத்தக்கது.
பழனியில் பரிசோதனை
இதேபோல் பழனியில், தாலுகா அலுவலகத்தில் நேற்று கொரோனா பரிசோதனை முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் அரசு அலுவலர்கள், கட்சி முகவர்கள் என 250 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் 2-வது கட்ட தடுப்பூசியும் பலர் செலுத்திக் கொண்டனர்.

Next Story