குழாயில் உடைப்பு ஏற்பட்டு வீணாகும் குடிநீர்


குழாயில் உடைப்பு ஏற்பட்டு வீணாகும் குடிநீர்
x
தினத்தந்தி 30 April 2021 1:50 AM IST (Updated: 30 April 2021 1:50 AM IST)
t-max-icont-min-icon

மதனத்தூரில் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாக வெளியேறுகிறது. மேலும் குடிநீரில் மாசு கலப்பதால் பொதுமக்களுக்கு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தா.பழூர்:

குழாயில் உடைப்பு
அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள வாழைக்குறிச்சி மற்றும் மதனத்தூர் இடையே, கொள்ளிடம் ஆற்றில் இருந்து ஆண்டிமடம் பகுதிக்கு குடிநீர் வினியோகம் செய்வதற்காக குழாய் மூலம் தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. இந்த குழாயில் தினமும் காலை நேரத்தில் ஆண்டிமடம் பகுதிக்கு பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டுள்ள நீருந்து நிலையங்கள் மூலம் தண்ணீர் அனுப்பி வைக்கப்படுகிறது.
இந்நிலையில் ஆற்றில் இருந்து மதனத்தூர் பொன்னாற்றின் குறுக்கே, ஆற்றின் கீழ்ப்பகுதியில் பதிக்கப்பட்டுள்ள குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தண்ணீர் ெசல்லும் நேரங்களில், குழாயில் இருந்து தண்ணீர் வெளியேறுகிறது. மேலும் ஆயிரக்கணக்கான லிட்டர் தண்ணீர், பொன்னாற்றில் கழிவுநீர் குட்டைபோல் தேங்குகிறது. குழாயில் தண்ணீர் செல்வது நிறுத்தப்பட்டவுடன், குட்டைபோல் தேங்கிய தண்ணீர் மீண்டும் குழாய்க்குள் செல்கிறது.
மாசு கலந்த நீர்
இதனால் கொள்ளிடம் கூட்டுக்குடிநீர் மாசு கலந்த நீராக மாறுகிறது. இந்த குழாயில் செல்லும் தண்ணீர் ஆண்டிமடம் பகுதிக்கு மட்டுமின்றி ஜெயங்கொண்டம் மற்றும் தா.பழூர் வட்டார பகுதிகளிலும் பல்வேறு இடங்களில் குடிநீராக பயன்படுத்தப்படுகிறது. இதனால் மாசு கலந்த தண்ணீரை குடிப்பதன் மூலமாக வாந்தி, பேதி உள்ளிட்ட பல்வேறு உணவுக்குழல் சார்ந்த நோய்த்தொற்றுகள் பொதுமக்களுக்கு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு, உடைப்பு ஏற்பட்டுள்ள குழாயை சீரமைத்து, பொதுமக்களுக்கு மாசு கலப்பு இல்லாத தண்ணீர் வினியோகிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story