3 ஆயிரம் சதுர அடிக்கு மேற்பட்ட கடைகளை மூடாவிட்டால் ‘சீல்’


3 ஆயிரம் சதுர அடிக்கு மேற்பட்ட கடைகளை மூடாவிட்டால் ‘சீல்’
x
தினத்தந்தி 30 April 2021 1:50 AM IST (Updated: 30 April 2021 1:50 AM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூர் மாவட்டத்தில் 3 ஆயிரம் சதுர அடிக்கு மேற்பட்ட கடைகளை மூடாவிட்டால், அந்த கடைகளை பூட்டி ‘சீல்' வைக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

பெரம்பலூர்:

கடைகளை மூட உத்தரவு
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதையொட்டி தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. அதன் ஒரு கட்டமாக தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு நடைமுறையில் உள்ளது. ஞாயிற்றுக்கிழமை முழு நேர ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது.
இந்த நிலையில் 3 ஆயிரம் சதுர அடிக்கு மேற்பட்ட கடைகள், வர்த்தக நிறுவனங்கள் அனைத்தையும் மூட வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று காலை முதல் இதற்கான நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொண்டனர்.
‘சீல்’ வைக்கப்படும்
பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள 3 ஆயிரம் சதுர அடிக்கு மேற்பட்ட கடைகள், வணிக நிறுவனங்களை அடைக்குமாறு அந்தந்த நிறுவனங்களின் உரிமையாளர்கள் மற்றும் நிர்வாகிகளிடம் நகராட்சி அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர். ஆனால் பெரம்பலூர் நகர்ப்பகுதியில் 3 ஆயிரம் சதுர அடிக்கு மேற்பட்ட ஜவுளிக்கடைகள், நகைக்கடைகள், வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் என மொத்தம் 25 கடைகளில், 10-க்கும் குறைவான கடைகள் மட்டும் மூடப்பட்டிருந்தன. மற்ற கடைகளை வழக்கம்போல் திறந்து வியாபாரம் செய்து வந்தனர்.
இதேபோல் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் 3 ஆயிரம் சதுர அடிக்கு மேற்பட்ட கடைகள் திறக்கப்பட்டிருந்தன. இது குறித்து தகவல் அறிந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள், 3 ஆயிரம் சதுர அடிக்கு மேற்பட்ட கடைகள் அனைத்தையும் இன்று(வெள்ளிக்கிழமை) முதல் திறக்கக்கூடாது. மீறி திறந்தால் கடைகளை பூட்டி ‘சீல்' வைக்கப்படும். இந்த கடைகளை அரசின் மறு உத்தரவு வரும் வரை திறக்கக்கூடாது, என்று எச்சரித்தனர்.

Next Story