கோபி, அந்தியூர், சத்தி, கொடுமுடி பகுதிகளில் வேட்பாளர்கள், வாக்குச்சாவடி முகவர்களுக்கு கொரோனா பரிசோதனை


கோபி, அந்தியூர், சத்தி, கொடுமுடி பகுதிகளில் வேட்பாளர்கள், வாக்குச்சாவடி முகவர்களுக்கு கொரோனா பரிசோதனை
x
தினத்தந்தி 30 April 2021 2:30 AM IST (Updated: 30 April 2021 2:30 AM IST)
t-max-icont-min-icon

கோபி, அந்தியூர், சத்தியமங்கலம், கொடுமுடி ஆகிய பகுதிகளில் வேட்பாளர்கள், வாக்குச்சாவடி முகவர்களுக்கு கொரோனா பரிசோதனை எடுக்கப்பட்டது.

ஈரோடு
கோபி, அந்தியூர், சத்தியமங்கலம், கொடுமுடி ஆகிய பகுதிகளில் வேட்பாளர்கள், வாக்குச்சாவடி முகவர்களுக்கு கொரோனா பரிசோதனை எடுக்கப்பட்டது.
பவானி
பவானி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் அவருடைய முகவகர்களுக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை முகாம் பவானி மேட்டூர் மெயின் ரோட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. இதில் மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சருமான கே.சி.கருப்பணன், தி.மு.க. வேட்பாளர் கே.பி.துரைராஜ், ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் கிருஷ்ணராஜ், மாவட்ட தி.மு.க. செயலாளர் நல்லசிவம் மற்றும் வேட்பாளர்களின் முகவர்கள் பலர் கலந்து கொண்டு கொரோனா மருத்துவ பரிேசாதனை மேற்கொண்டனர். 
கோபி
தமிழக சட்டமன்ற தேர்தல் கடந்த 6-ந் தேதி நடைபெற்றது. இதைத்தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. தற்போது தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு வரும் வேட்பாளர்கள், முகவர்களுக்கு தேர்தல் ஆணையம் நிபந்தனைகள் விதித்துள்ளது. கொரோனா நெகட்டிவ் சான்றிதழுடன் உள்ளே நுழைய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து வாக்குச்சாவடி முகவர்கள், வேட்பாளர்கள் கொரோனா பரிசோதனை எடுத்து வருகிறார்கள். அதன்படி ஈரோடு மாவட்டத்திலும் நடந்து வருகிறது. கோபியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் சிறுவலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் செந்தில்குமார் தலைமையில் வாக்குச்சாவடி முகவர்களுக்கு கொரோனா பரிசோதனை நேற்று நடந்தது. இதில் கோபி சட்டமன்ற தொகுதியை சேர்ந்த அனைத்து கட்சிகளை சேர்ந்த வாக்குச்சாவடி முகவர்களும் பரிசோதனை செய்துகொண்டனர்.
அந்தியூர்
இதேபோல் அந்தியூர் சட்டமன்ற தொகுதி கட்சி மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள், வாக்குச்சாவடி முகவர்கள் ஆகியோருக்கு அந்தியூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் கொரோனா பரிசோதனை எடுக்கப்பட்டது. மொத்தம் 250 பேருக்கு டாக்டர்கள், செவிலியர்கள் கொரோனா பரிசோதனை எடுத்தனர். அப்போது அந்தியூர் சட்டமன்ற தொகுதி உதவி தேர்தல் அதிகாரி சக்திவேல், அந்தியூர் கிராம நிர்வாக அலுவலர் முருகானந்தம், வருவாய்த்துறையினர் உடன் இருந்தனர்.
மேலும் அந்தியூர் பேரூராட்சி செயல் அதிகாரி ஹரி ராமமூர்த்தி தலைமையில் பரிசோதனை நடக்கும் பள்ளிக்கூட வளாகம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு, பிளீச்சிங் பவுடர் போடப்பட்டது.
சத்தியமங்கலம்
பவானிசாகர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அனைத்து அரசியல் கட்சி வேட்பாளர்கள் மற்றும் வாக்குச்சாவடி முகவர்களுக்கு சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் பள்ளிக்கூடத்தில்  கொரோனா பரிசோதனை நடந்தது. இதில் 360 பேருக்கு கொரோனா பரிசோதனை எடுக்கப்பட்டது.
கொடுமுடி
கொடுமுடி தாலுகா அலுவலகத்தில் வாக்கு எண்ணும் பணிக்குச் செல்லும் அலுவலர்கள் மற்றும் ஊழியர்களுக்கான கொரோனா பரிசோதனை வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் மேகநாதன் தலைமையில் சுகாதாரத்துறையினர் மூலமாக நடத்தப்பட்டது. இதில் தாசில்தார் ஸ்ரீதர், வருவாய் ஆய்வாளர் நிர்மலாதேவி, தலைமையிடத்து துணை தாசில்தார் மரியஜோசப், மண்டல துணை தாசில்தார் தாமோதரன் மற்றும் வருவாய்த்துறையினர் கிராம நிர்வாக அலுவலர்கள் ஆகியோருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.
பெருந்துறை 
சித்தோடு என்ஜினீயரிங் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் பணியாற்ற உள்ள அரசு அலுவலர்களுக்கு கொரோனா பரிசோதனை முகாம் பெருந்துறையில் காஞ்சிக்கோவில் ரோட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. 
இந்த நிகழ்ச்சியில் வாக்கு எண்ணிக்கையில் ஈடுபடும் 875 பேருக்கு, கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை, பெருந்துறை தாசில்தார் மற்றும் மாவட்ட சுகாதாரத் துறையினர் செய்திருந்தனர். 

Next Story