மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் கணவருக்கு 2 ஆண்டு ஜெயில்- ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பு
மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் கணவருக்கு 2 ஆண்டு ஜெயில் தண்டனை மற்றும் ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து ஈரோடு மகளிர் கோர்ட்டு நீதிபதி தீர்ப்பு கூறினார்.
ஈரோடு,
அந்தியூர் அருகே உள்ள பிரம்மதேசம் செம்புளிச்சாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் முனிசாமி. இவரது மகன் செந்தில்நாதன். வியாபாரம் செய்து வந்தார். இவருக்கு அதே பகுதியை சேர்ந்த காளியப்பன் என்பவருடைய மகள் உமா மகேஸ்வரியுடன் திருமணம் நடந்தது.
திருமணத்தின் போது செந்தில்நாதன் மற்றும் அவரது தாயார் அய்யம்மாள் ஆகியோர் 25 பவுன் நகைகள் வரதட்சணையாக கேட்டனர். ஆனால் 15 பவுன் நகை வழங்கப்பட்டது. மேலும் 10 பவுன் நகை கேட்டு செந்தில்நாதனும், அவரது தாயாரும் கொடுமை செய்ததாக தெரிகிறது. பின்னர் ஊர் பஞ்சாயத்து மூலம் பேசி சமாதானம் செய்யப்பட்டது. இதையடுத்து 2 பேரும் குடும்பம் நடத்தி வந்தனர்.
அவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் பிறந்தன. ஆனாலும் தொடர்ந்து உமா மகேஸ்வரியை கணவர் செந்தில்நாதன் துன்புறுத்தி வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் கடந்த 10-1-2011 அன்று உமாமகேஸ்வரி அவரது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கொடுமை
இதுபற்றி அந்தியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். ஆனால் உமாமகேஸ்வரி தற்கொலையில் மர்மம் இருப்பதாக அவரது அண்ணன் ரவிச்சந்திரன் ஒரு புகார் கொடுத்தார். அந்த புகார் மனுவில் உமாமகேஸ்வரிக்கு திருமணம் ஆகி 16 ஆண்டுகளாக அவரது கணவர் சித்ரவதை செய்து வந்ததாகவும், அவர் மரணம் அடைந்த அன்றைய தினத்தில் கூட செந்தில்நாதன் ரூ.10 ஆயிரம் வாங்கித்தர கேட்டு கொடுமைப்படுத்தியதாகவும், உமாமகேஸ்வரி வீட்டில் வந்து அழுததாகவும் அந்த புகாரில் கூறி இருந்தார்.
இதுதொடர்பாக சென்னை ஐகோர்ட்டு வழிகாட்டுதலின்பேரில் அந்தியூர் போலீசார் விசாரித்து, ஈரோடு மகளிர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
2 ஆண்டு ஜெயில்
வழக்கை விசாரித்த நீதிபதி மாலதி நேற்று தீர்ப்பு அளித்தார். அந்த தீர்ப்பில், மனைவியை கொடுமை செய்து தற்கொலைக்கு தூண்டிய குற்றத்துக்காக செந்தில்நாதனுக்கு 2 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது.
மேலும் அவருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு, அந்த தொகை உமா மகேஸ்வரியின் பெற்றோரிடம் வழங்கவும் உத்தரவிட்டு, நீதிபதி மாலதி அந்த தீர்ப்பில் கூறி இருந்தார்.
இந்த வழக்கில் போலீஸ் தரப்பில் அரசு வக்கீல் ஜி.டி.ஆர்.சுமதி ஆஜர் ஆனார்.
Related Tags :
Next Story