கொரோனா பரவல் அதிகரிப்பு: சேலத்தில் ஜவுளி-நகைக்கடைகள் அடைப்பு
கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக சேலத்தில் பெரிய ஜவுளிக்கடைகள் மற்றும் நகைக்கடைகள் மூடப்பட்டன.
சேலம்:
கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக சேலத்தில் பெரிய ஜவுளிக்கடைகள் மற்றும் நகைக்கடைகள் மூடப்பட்டன.
நகைக்கடைகள் அடைப்பு
சேலம் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. மேலும் உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகின்றன. கொரோனா நோய் தொற்றை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் மூலம் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் கொரோனா பரவல் அதிகரிப்பதை தொடர்ந்து 3 ஆயிரம் சதுர அடி பரப்பளவுக்கு மேல் உள்ள கடைகளை அடைக்க அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, சேலம் மாநகரில் புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம், கடை வீதி, அஸ்தம்பட்டி, அழகாபுரம் உள்ளிட்ட பல இடங்களில் பெரிய ஜவுளிக்கடைகள், நகைக்கடைகள் மற்றும் வணிக வளாகங்கள் அடைக்கப்பட்டன.
பொதுமக்கள் கூட்டம் குறைந்தது
இதனால் தொழிலாளர்கள் பலர் வேலையின்றி தவித்து வருகின்றனர். பெரிய கடைகள் அடைக்கப்பட்டதால் சாலைகளில் மக்கள் நடமாட்டமும் குறைந்தது. மேலும் ஆங்காங்கே சிறிய கடைகள் மட்டும் செயல்பட்டு வருகின்றன. கொரோனா பரவல் காரணமாக அங்கும் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது. கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக மீண்டும் பல தொழில்கள் முடங்கி வருகின்றன. திருமண நிகழ்ச்சிகளில் குறைந்த எண்ணிக்கையிலான மக்களே பங்கேற்க வேண்டும், கோவில்கள் மூடல் உள்ளிட்ட உத்தரவுகளால் சேலத்தில் பூக்கள் விற்பனையும் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் பூக்களின் விலையும் குறைந்துள்ளது.
Related Tags :
Next Story