முதலீடு செய்தால் இரட்டிப்பு பணம் தருவதாக கூறி செவிலியரிடம் 10 பவுன் நகை- ரூ.5 லட்சம் மோசடி- நடவடிக்கை எடுக்க கோரி போலீஸ் சூப்பிரண்டிடம் மனு

முதலீடு செய்தால் இரட்டிப்பு பணம் தருவதாக கூறி செவிலியரிடம் 10 பவுன் நகை- ரூ.5 லட்சம் மோசடி- நடவடிக்கை எடுக்க கோரி போலீஸ் சூப்பிரண்டிடம் மனு
x
தினத்தந்தி 30 April 2021 4:32 AM IST (Updated: 30 April 2021 4:32 AM IST)
t-max-icont-min-icon

முதலீடு செய்தால் இரட்டிப்பு பணம் தருவதாக கூறி செவிலியரிடம் 10 பவுன் நகை மற்றும் ரூ.5 லட்சம் மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் மனு கொடுக்கப்பட்டது.

ஈரோடு
முதலீடு செய்தால் இரட்டிப்பு பணம் தருவதாக கூறி செவிலியரிடம் 10 பவுன் நகை மற்றும் ரூ.5 லட்சம் மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் மனு கொடுக்கப்பட்டது.
இரட்டிப்பு பணம்
ஈரோடு சின்னப்பா வீதியை சேர்ந்த வசந்தி (வயது 59) என்பவர் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு வந்து, போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரையிடம் புகார் மனு ஒன்றை நேற்று கொடுத்தார். 
அந்த மனுவில் அவர் கூறி இருந்ததாவது:-
நான் ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் செவிலியராக பணியாற்றி வருகிறேன். எனது வீட்டுக்கு கடந்த ஆண்டு மே மாதம் எங்களது உறவினரின் மகளான ராதா (48) என்பவர் வந்தார். அப்போது அவர், தனக்கு தெரிந்த நிறுவனத்தில் பணம் முதலீடு செய்தால் ஒரு மாத காலத்திற்குள் முதலீடு செய்த தொகையை விட இரட்டிப்பு பணம் கிடைக்கும் என்றும், பல கவர்ச்சிகரமான திட்டங்களையும் கூறினார்.
கொலை மிரட்டல்
இதனை நம்பி, என்னிடம் இருந்த 10 பவுன் நகை மற்றும் ரூ.5 லட்சத்தை ராதாவிடம் கொடுத்தேன். ஆனால், அவர்கள் கூறியபடி இரட்டிப்பு பணமும், நான் கொடுத்த பணம், நகைகளையும் தரவில்லை. நேரில் சென்று பல முறை கேட்டும் என்னை ஏமாற்றி வந்தார். இதுகுறித்து நேற்று முன்தினம் ராதாவிடம் கேட்டபோது அவர் பணம் தர முடியாது என்று கூறியதோடு, உன்னால் முடிந்ததை பார்த்துக்கொள் என்றும், பணம் கேட்டு தொந்தரவு செய்தால் ஆள் வைத்து கொலை செய்து விடுவேன் என்றும் மிரட்டல் விடுத்தார்.
நான் சிறுக, சிறுக சேமித்து வைத்த பணம், நகையை ராதா கூறியதை நம்பி, அவரிடம் கொடுத்து ஏமாந்து விட்டேன். நம்ப வைத்து ஏமாற்றிய ராதா மீதும், சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் மீதும் நடவடிக்கை எடுத்து, எனது பணத்தையும், நகையையும் பெற்று தர வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறி இருந்தார்.

Next Story