வாக்கு எண்ணிக்கையில் கலந்து கொள்ளும் வேட்பாளர்கள், முகவர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு முறை ஆலோசனை கூட்டம்- கலெக்டர் கதிரவன் தலைமையில் நடந்தது


வாக்கு எண்ணிக்கையில் கலந்து கொள்ளும் வேட்பாளர்கள், முகவர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு முறை ஆலோசனை கூட்டம்- கலெக்டர் கதிரவன் தலைமையில் நடந்தது
x
தினத்தந்தி 30 April 2021 4:34 AM IST (Updated: 30 April 2021 4:34 AM IST)
t-max-icont-min-icon

சட்டமன்ற தேர்தலையொட்டி வாக்கு எண்ணிக்கையில் கலந்து கொள்ளும் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் கலெக்டர் கதிரவன் தலைமையில் நடந்தது.

ஈரோடு
சட்டமன்ற தேர்தலையொட்டி வாக்கு எண்ணிக்கையில் கலந்து கொள்ளும் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் கலெக்டர் கதிரவன் தலைமையில் நடந்தது.
ஆலோசனை கூட்டம்
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ள வாக்கு எண்ணிக்கையில் கலந்து கொள்ளும் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், நேற்று நடைபெற்றது.
இந்த கூட்டத்துக்கு மாவட்ட தேர்தல் அதிகாரியும், மாவட்ட கலெக்டருமான சி.கதிரவன் தலைமை தாங்கினார். தேர்தல் பொதுப்பார்வையாளர்கள் அடோனு சாட்டர்ஜி (ஈரோடு மேற்கு), நர்பு வாங்டி பூட்டியா (கோபிசெட்டிபாளையம், பவானிசாகர்) ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.
152 மேஜைகள்
கூட்டத்தில் மாவட்ட தேர்தல் அதிகாரியும், மாவட்ட கலெக்டருமான சி.கதிரவன் தெரிவித்ததாவது:-
ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணிக்கு சித்தோடு ஐ.ஆர்.டி.டி. என்ஜினீயரிங் கல்லூரி மற்றும் கோபிசெட்டிபாளையம் கோபி கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் நடைபெற உள்ளது. அதன்படி, ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளுக்கு தலா 19 மின்னணு வாக்குப்பதிவு எண்ணிக்கை மற்றும் தபால் வாக்குப்பதிவு எண்ணிக்கை மேஜைகளும் என 152 மேஜைகளில் நடைபெற உள்ளது.
வாக்கு எண்ணிக்கையில் 8 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தலா ஒரு தேர்தல் பொதுப்பார்வையாளர் என 8 பொதுப்பார்வையாளர்களும், தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் 56 பேரும், 184 மேற்பார்வையாளர்களும், 184 உதவியாளர்களும், 184 நுண் பார்வையாளர்களும், 8 தொடர்பு அலுவலர்களும், 800 மருத்துவ குழுக்களும், 16 அலுவலக உதவியாளர்களும், இதர பணியாளர்கள் 320 பேரும், 160 பத்திரிகையாளர்களும், பாதுகாப்பு பணிக்கு 1,080 போலீசார்களும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
முகவர்கள்
மேலும், ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி மற்றும் பவானி தொகுதிக்கு தலா 28 பேரும், ஈரோடு மேற்கு மற்றும் மொடக்குறிச்சி தொகுதிக்கு தலா 30 பேரும், பெருந்துறை தொகுதிக்கு 50 பேரும், அந்தியூர் சட்டமன்ற தொகுதிக்கு 40 பேரும், கோபிசெட்டிபாளையம் தொகுதிக்கு 38 பேரும், பவானிசாகர் (தனி) தொகுதிக்கு 12 பேரும் என மொத்தம் 256 பேர் வேட்பாளரின் முதன்மை மற்றும் வாக்கு எண்ணும் மைய முகவர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு 196 பேரும், ஈரோடு மேற்கு தொகுதிக்கு 270 பேரும், மொடக்குறிச்சி தொகுதிக்கு 270 பேரும், பெருந்துறை தொகுதிக்கு 450 பேரும், பவானி தொகுதிக்கு 252 பேரும், அந்தியூர் தொகுதிக்கு 360 பேரும், கோபிசெட்டிபாளையம் தொகுதிக்கு 342 பேரும், பவானிசாகர் (தனி) தொகுதிக்கு 108 பேரும் என மொத்தம் 2 ஆயிரத்து 248 வேட்பாளர்கள் முகவர்களும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
கொரோனா பரிசோதனை சான்று
வாக்கு எண்ணிக்கையில் கலந்து கொள்ளும் வேட்பாளர்கள், முகவர்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளான முக கவசம் மற்றும் கையுறை அணிதல், சமூக இடைவெளி போன்றவற்றை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். மேலும் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் கொரோனா பரிசோதனை சான்று வைத்திருக்கும் பட்சத்தில் மட்டுமே வாக்கு எண்ணும் மையத்துக்குள் அனுமதிக்கப்படுவர். வேட்பாளர்கள், முகவர்கள் 2 முறை கொரோனா தடுப்பூசி போட்டிருந்தாலும் அனுமதிக்கப்படுவர். தடுப்பூசி செலுத்தப்பட்டதற்கான சான்று கட்டாயமாக சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு பயணம் செய்ய வேட்பாளர், முதன்மை முகவருக்கு ஒரு வாகனம் மட்டும் அனுமதிக்கப்படும். ஏனைய வாக்கு எண்ணிக்கை முகவர்கள் அனைவருக்கும் மொத்தமாக ஒரு வாகனம் ஏற்பாடு செய்து அதற்கு சம்பந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வாகன அனுமதிச்சீட்டு பெற்றிருத்தல் வேண்டும். மேற்காணும் வாகனங்கள் வாக்கு எண்ணிக்கை மையத்தின் முகப்பு வரை மட்டுமே அனுமதிக்கப்படும்.
சட்டம் ஒழுங்கு பிரச்சினை
வாக்கு எண்ணிக்கை முகவர்கள் பேனா, பென்சில், வெள்ளைத்தாள் மற்றும் படிவம் 17 சி-ன் நகலினை எடுத்து வரலாம். வாக்கு எண்ணிக்கை முகவர்களுக்கு வழங்கப்படும் அடையாள வில்லையில் அவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட மேஜை எண் மற்றும் அவரது கையொப்பம் கண்டிப்பாக இருத்தல் வேண்டும். முகவர்கள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட மேஜை தவிர வேறு பகுதிகளுக்கு செல்லக்கூடாது. தேர்தல் பார்வையாளர்கள் நீங்கலாக மற்றவர்கள் கைப்பேசி, ஐ பேடு, மடிக்கணினி போன்ற மின்சாதன பொருட்களை கொண்டு செல்ல அனுமதியில்லை.
கண்டிப்பாக தீப்பெட்டி, புகையிலை பொருட்கள், பற்றவைப்பான், பான் பராக், குட்கா மசாலா, ஹான்ஸ், மது வகைகள் மற்றும் இதர குளிர்பானங்கள் போன்ற பொருட்கள் அனுமதிக்கப்பட மாட்டாது. அரசியல் பேசுவது கண்டிப்பாக தவிர்க்கப்பட வேண்டும். சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் நிலை வருமாயின், அந்த முகவர்களது அனுமதி ரத்து செய்யப்பட்டு, வாக்கு எண்ணும் மையத்தில் இருந்தும், வளாகத்தில் இருந்தும் வெளியேற்றப்படுவர்.
கொரோனா தடுப்பு நடவடிக்கை
மேஜை வாரியாக நியமனம் செய்யப்பட்ட வாக்கு எண்ணிக்கை முகவர்கள் ஏதேனும் முரண்பாடு இருப்பின் மேஜை அலுவலர்களுடன் விவாதம் செய்யாமல் தங்களது முதன்மை முகவர், வேட்பாளரிடம் தெரிவித்து அதற்குரிய தீர்வு காண வேண்டும். வாக்கு எண்ணிக்கையில் கலந்து கொள்ளும் அனைத்து அலுவலர்களும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளான முக கவசம் மற்றும் கையுறை அணிதல், சமூக இடைவெளி ஆகியவற்றை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கடைபிடிக்கும் அலுவலர்களை மட்டுமே வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுத்தி, அடையாள அட்டை வழங்கிட தேர்தல் நடத்தும் அலுவலர்கள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
வாக்கு எண்ணிக்கை மையத்தில் வாக்கு முடிவுகளை பதிவு செய்திட தேவையான கணினி, பிரிண்டர், பேப்பர் உள்ளிட்ட எழுதுபொருட்களை தயார் நிலையில் வைத்திருத்தல் வேண்டும். வாக்கு எண்ணிக்கையில் ஈடுபட்டுள்ள மேஜை அலுவலர்கள் முகவர்களுடன் தேவையின்றி வாக்குவாதத்தில் ஈடுபடக்கூடாது. வாக்கு எண்ணிக்கை நடைபெறும் அறையில் தேவையான அனைத்து முன்னேற்பாடுகளையும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும்.
முக கவசம்
வாக்கு எண்ணிக்கை முன்னேற்பாடு பணிகள் தொடர்பாக தேர்தல் பார்வையாளர்களால் இந்திய தேர்தல் ஆணையத்திற்கு அனுப்ப வேண்டிய அனைத்து விவரங்களுக்குரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். வாக்கு எண்ணிக்கை முடிவுற்று ஒவ்வொரு சுற்று வாரியாக புள்ளிவிவரம் தயார் செய்து தேர்தல் பார்வையாளரின் ஒப்புதல் பெற்ற பின்னரே அடுத்த சுற்றுக்கு அனுமதிக்க வேண்டும்.
மேலும் கொரோனா வைரஸ் பாதுகாப்பு நடவடிக்கையாக, 8 சட்டமன்ற தொகுதிகளுக்கும் 19 ஆயிரத்து 484 துணி முக கவசங்களும், 6 ஆயிரத்து 425 முக கவசங்களும், 20 ஆயிரத்து 357 கையுறை, 320 பாட்டில்கள் கிருமிநாசினி, 184 குப்பை கூடைகள், 368 மஞ்சள் பை, 34 உடல் வெப்பநிலை அறியும் தெர்மல் ஸ்கேனர் ஆகியவை வழங்கப்படுகிறது.
வாக்கு எண்ணும் கூடம் அனைத்தும் இந்திய தேர்தல் ஆணையத்தால் இணையதளம் மூலம் நேரடியாக கண்காணிக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. வாக்கு எண்ணும் கூடத்தில் அனைத்தும் முகவர்களும் இந்திய தேர்தல் ஆணையத்தால் வகுக்கப்பட்ட விதிமுறைகளை கடைபிடித்து கண்ணியத்துடன் நடந்து கொள்ள வேண்டும்.
ஒத்துழைப்பு
எனவே, ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கையின் போது அனைத்து வேட்பாளர்களும், முகவர்களும் இந்திய தேர்தல் ஆணையத்தால் வகுக்கப்பட்ட விதிமுறைகளை கடைபிடித்து வாக்கு எண்ணும் பணி சிறந்த முறையில் நடத்த தேவையான ஒத்துழைப்பினை வழங்க வேண்டும்.
இவ்வாறு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் தெரிவித்தார்.
கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை, உதவி கலெக்டர் (பயிற்சி) ஏக்கம்ஜேசிங், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் பாலாஜி (பொது), ஈஸ்வரன் (கணக்குகள்), கருப்புசாமி (தேர்தல்) மற்றும் அனைத்து தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், அனைத்து கட்சி வேட்பாளர்கள் மற்றும் வாக்கு எண்ணும் முகவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

Next Story