கர்நாடகாவில் முழு ஊரடங்கு: புஞ்சைபுளியம்பட்டி வாரச்சந்தையில் சின்ன வெங்காயம் விற்பனையாகாமல் தேக்கம்
புஞ்சைபுளியம்பட்டி வாரச்சந்தைக்கு கர்நாடகா வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் வராததால் சின்ன வெங்காய மூட்டைகள் விற்பனையாகாமல் தேக்கமடைந்துள்ளது.
புஞ்சைபுளியம்பட்டி
புஞ்சைபுளியம்பட்டி வாரச்சந்தைக்கு கர்நாடகா வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் வராததால் சின்ன வெங்காய மூட்டைகள் விற்பனையாகாமல் தேக்கமடைந்துள்ளது.
சின்ன வெங்காயம்
புஞ்சைபுளியம்பட்டியில் உள்ள வாரச்சந்தை வியாழக்கிழமை தோறும் கூடுகிறது. தமிழகத்தில் பொள்ளாச்சிக்கு அடுத்தபடியாக 2-வது சந்தையாக விளங்கும் புஞ்சைபுளியம்பட்டி வாரச்சந்தைக்கு ஈரோடு, திருப்பூர், கோவை, நாமக்கல் உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கர்நாடக மாநிலத்தில் இருந்தும் சின்ன வெங்காயம் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.
இதனை வாங்க தாளவாடி மலைப்பகுதி மற்றும் கர்நாடக மாநிலம் கொள்ளேகால், சாம்ராஜ்நகர், மைசூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் வருவது வழக்கம்.
விற்பனையாகாமல் தேக்கம்
இந்த நிலையில் நேற்று புஞ்சைபுளியம்பட்டி வாரச்சந்தை கூடியது. இதற்கு 800-க்கும் மேற்பட்ட சின்ன வெங்காய மூட்டைகளை வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர். ஆனால் கர்நாடக மாநிலத்தில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால் அங்கு 14 நாட்கள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதனால் வாகன போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதால் கர்நாடகாவில் இருந்து எந்த வியாபாரிகளும், விவசாயிகளும் வரவில்லை.
இதன் காரணமாக கடந்த 2 வாரங்களாக ஒரு கிலோ ரூ.80-க்கு விற்ற சின்ன வெங்காயம் நேற்று விலை குறைந்தது.
ஒரு கிலோ ரூ.35 முதல் ரூ.45 வரை விற்பனையானது. வழக்கமாக சந்தைக்கு கொண்டு வரப்படும் 800 மூட்டைகள் விற்பனையாகும் நிலையில் நேற்று சந்தைக்கு கர்நாடக மாநில வியாபாரிகள், விவசாயிகள் வராததால் 400 சின்ன வெங்காய மூட்டைகள் மட்டுமே விற்பனையானது. மீதி 400 மூட்டை சின்ன வெங்காயம் விற்பனையாகாமல் தேக்கமடைந்ததால் வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளது என்று சந்தை நிர்வாகிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story