டெலிபோன் ஒட்டுகேட்பு வழக்கு; ஐ.பி.எஸ். பெண் அதிகாரி ராஷ்மி சுக்லாவுக்கு மீண்டும் சம்மன்; 3-ந் தேதிக்குள் நேரில் ஆஜராக உத்தரவு
ஐ.பி.எஸ். பெண் அதிகாரி ராஷ்மி சுக்லாவிற்கு மீண்டும் மும்பை போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.
ஆஜராகவில்லை
மராட்டிய சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் சமீபத்தில் போலீஸ் இடமாற்றத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாக குற்றம் சாட்டினார். மேலும் இதற்கு சாட்சியாக மும்பையில் புலனாய்வு பிரிவில் கூடுதல் டி.ஜி.பி.யாக இருந்த ராஷ்மி சுக்லா, அப்போதைய டி.ஜி.பி.க்கு அனுப்பிய அறிக்கையை மேற்கோள் காட்டினார். அந்த அறிக்கையில் போலீஸ் இடமாற்ற ஊழல் தொடர்பாக புலனாய்வு பிரிவு சார்பில் டெலிபோன் ஒட்டுக்கேட்கப்பட்ட தகவல்கள் இருந்தன.
இதையடுத்து ஐ.பி.எஸ். அதிகாரி ராஷ்மி சுக்லா அரசின் அனுமதி இன்றி போன் அழைப்புகளை ஒட்டுக்கேட்டதாக பி.கே.சி. சைபர் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் ரகசிய அறிக்கையை கசிய விட்டது தொடர்பாக ரகசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழும் வழக்குப்பதிவு செய்தனர்.
இதையடுத்து விசாரணைக்காக நேரில் ஆஜராகுமாறு தற்போது ஐதராபாத்தில் சி.ஆர்.பி.எப். கூடுதல் டி.ஜி.பி.யாக உள்ள ராஷ்மி சுக்லாவுக்கு மும்பை சைபர் குற்றப்பிரிவு போலீசார் சம்மன் அனுப்பினர். அதில் கடந்த புதன்கிழமை பி.கே.சி.யில் உள்ள அலுவலகத்தில் நேரில் ஆஜராகுமாறு தெரிவிக்கப்பட்டு இருந்தது.
மீண்டும் சம்மன்இதற்கு ராஷ்மி சுக்லா இ-மெயில் மூலம் அளித்த பதிலில், “தற்போது நிலவிவரும் கொரோனா பாதிப்பு சூழ்நிலையால் தன்னால் நேரில் ஆஜராக முடிவில்லை” என கூறினார்.
மேலும் கேட்கவேண்டிய கேள்விகளை இ-மெயிலில் அனுப்பி வைக்குமாறு அவர் கேட்டுக்கொண்டார்.ஆனால் அவரது கோரிக்கையை மும்பை சைபர் குற்றப்பிரிவு போலீசார் நிராகரித்தனர். இதையடுத்து ராஷ்மி சுக்லாவுக்கு மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது. அதில், வருகிற 3-ந் தேதிக்குள் நேரில் ஆஜராகுமாறு அவருக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.