தூத்துக்குடியில் நாளை வாக்கு எண்ணிக்கை
தூத்துக்குடியில் நாளை வாக்கு எண்ணிக்கை நடக்கிறது
தூத்துக்குடி:
தூத்துக்குடியில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணிக்கு 6 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது.
வாக்கு எண்ணிக்கை
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு கடந்த மாதம் 6-ந் தேதி நடந்தது. இதில் பதிவான வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் வாக்கு எண்ணிக்கை மையமான தூத்துக்குடி அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் தொகுதி வாரியாக காப்பு அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளன. வாக்கு எண்ணிக்கை மையத்தில் துணை ராணுவத்தினர் உள்பட 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. சுமார் 250 போலீசார் 24 மணி நேரமும பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மையத்தில் 180 கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.
பயிற்சி
இதைத் தொடர்ந்து வாக்கு எண்ணிக்கைக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளன. வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஒவ்வொரு தொகுதிக்கும் 14 மேஜைகள் போடப்பட்டு உள்ளன. ஒவ்வொரு மேஜையிலும் ஒரு சூப்பிரவைசர், ஒரு உதவியாளர் மற்றும் ஒரு நுண்பார்வையாளர் நியமிக்கப்பட்டு உள்ளனர். தபால் ஓட்டுக்கள் எண்ணுவதற்கு ஒவ்வொரு தொகுதிக்கும் 3 மேஜைகள் போடப்பட்டு உள்ளன. ஒவ்வொரு மேஜைக்கும் ஒரு தாசில்தார், ஒரு சூப்பிரவைசர், ஒரு உதவியாளர் மற்றும் ஒரு நுண்பார்வையாளர் நியமிக்கப்பட்டு உள்ளனர். வாக்கு எண்ணிக்கைக்காக சுமார் 250 பேர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு தேர்தல் நடத்தும் அலுவலர்கள் தலைமையில் பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது. இந்த பணியாளர்கள் நேற்று சுழற்சி முறையில் தொகுதி வாரியாக ஒதுக்கீடு செய்யப்பட்டனர். நாளை காலையில் அவர்கள் சுழற்சி முறையில் மேஜை வாரியாக ஒதுக்கீடு செய்யப்பட உள்ளனர். வாக்கு எண்ணிக்கை மையத்தில் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டு, வாக்கு எண்ணிக்கை முழுவதும் பதிவு செய்து கண்காணிக்கப்படுகிறது.
நாளை
இந்த நிலையில் வாக்கு எண்ணிக்கை நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. காலை 8 மணிக்கு தபால் ஓட்டுக்கள் எண்ணப்படுகின்றன. 8.30 மணிக்கு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்குகிறது. வாக்கு எண்ணிக்கை முடிவுகளை ஒலிபெருக்கி மூலம் தெரிவிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
அதே போன்று வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு வரும் அரசியல் கட்சி முகவர்கள் மற்றும் வாக்கு எண்ணிக்கை அலுவலர்கள் உள்பட அனைவரும் கொரோனா தடுப்பூசி 2 தவணையும் போட்டு இருக்க வேண்டும். அல்லது 72 மணி நேரத்துக்கு முன்பாக கொரோனா தொற்று இல்லை என்ற பரிசோதனை சான்று சமர்ப்பித்து அடையா அட்டை பெற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அதன்படி அலுவலர்கள், வாக்கு எண்ணிக்கைக்கான அரசியல் கட்சி முகவர்கள் கொரோனா பரிசோதனை செய்து உள்ளனர். மேலும் வாக்கு எண்ணிக்கை மையத்தில் கொரோனா தடுப்பு பணிகள் முழுமையாக கடைபிடிக்கப்படுகின்றன. மையத்துக்கு வரும் அனைவருக்கும் தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்படுகிறது. அனைவரும் முககவசம் அணியவும், கிருமிநாசினி மூலம் கைகளை சுத்தம் செய்யவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். வாக்கு எண்ணிக்கை மையத்தில் சமூக இடைவெளியை கடைபிடிப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.
Related Tags :
Next Story