வாக்கு எண்ணும் மையத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு
திண்டுக்கல் மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மையத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
திண்டுக்கல்:
வாக்கு எண்ணும் மையம்
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளுக்கும், ரெட்டியார்சத்திரம் அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் வாக்கு எண்ணும் மையம் அமைக்கப்பட்டுள்ளது.
இதையொட்டி 7 தொகுதிகளுக்கான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரங்கள், வாக்குப்பதிவை உறுதி செய்யும் எந்திரங்கள் அந்த மையத்தில் தனித்தனி அறைகளில் வைக்கப்பட்டு இருக்கின்றன.
அந்த அறைகளுக்கு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய துணை ராணுவம் மற்றும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
தினமும் 240 போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளளர்.
மேலும் மையத்தின் வளாகம் முழுவதும் 150 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு இருக்கின்றன.
இதற்கிடையே நாளை (ஞாயிற்றுக்கிழமை) வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கிறது.
பாதுகாப்பு ஏற்பாடு
இதனால் வாக்கு எண்ணும் மையத்தில் கூடுதல் போலீசார் நியமிக்கப்பட்டு, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படுகிறது.
இதில் மையத்தின் வளாகத்தில் 2 இடங்களில் கண்காணிப்பு கோபுரம் அமைக்கப்பட்டு உள்ளது.
அதில் நின்றபடி போலீசார் தொலைநோக்கி மூலம் கண்காணிப்பில் ஈடுபடுவார்கள்.
அதேபோல் வாக்கு எண்ணும் மையத்துக்குள் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் செல்வதற்கு ஒரு பாதையும், அலுவலர்கள் செல்வதற்கு ஒரு பாதையும் அமைக்கப்பட்டு இருக்கின்றன.
அந்த பாதைகள் வழியாக வாக்கு எண்ணும் மையத்துக்கு வரும் அனைவரும் பலத்த சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுவார்கள்.
இதற்காக மையத்தின் நுழைவுவாயில் உள்பட முக்கிய இடங்களில் போலீசார் நியமிக்கப்படுகின்றனர்.
அதேபோல் மையத்தின் உள்ளே ஒவ்வொரு அறையிலும் போலீசார் நிறுத்தப்படுகின்றனர்.
மேலும் மையத்தின் வெளியே வேட்பாளர்களின் ஆதரவாளர்கள் திரள்வதை தடுப்பதற்கு 100 போலீசார் பணியில் ஈடுபடுவார்கள்.
ஒட்டுமொத்தமாக வாக்கு எண்ணும் மையம் முழுவதும் மொத்தம் 900 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
இந்த போலீசார் இன்று (சனிக்கிழமை) இரவு முதல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story