திருமணத்திற்கு முந்தைய நாளில் கொரோனாவால் மணமகன் சாவு மணமகள் கண்ணீர்
சிக்கமகளூரு அருகே திருமணத்திற்கு முந்தைய நாளில் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்ட மணமகன் இறந்தார். இதனால் மணமகள் கண்ணீர் விட்டு அழுதார்.
சிக்கமகளூரு,
சிக்கமகளூரு மாவட்டம் கொப்பா தாலுகா நரசிப்புரா கிராமத்தை சேர்ந்தவர் பிருத்விராஜ்(வயது 30). இவர் பெங்களூருவில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். பிருத்விராஜிக்கும், நரசிப்புரா கிராமத்தை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் கடந்த 2 மாதத்திற்கு முன்பு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டு இருந்தது.
அவர்களது திருமணம் நேற்று நடைபெற இருந்தது. திருமணத்திற்கான ஏற்பாடுகளை இருவீட்டாரும் மும்முரமாக செய்து வந்தனர். திருமணத்திற்காக கடந்த 10 நாட்களுக்கு முன்பு பெங்களூருவில் இருந்து நரசிப்புராவுக்கு பிருத்விராஜ் வந்து இருந்தார்.
இந்த நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு பிருத்விராஜிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அவர் மூச்சுவிட முடியாமல் அவதிப்பட்டார். இதையடுத்து என்.ஆர்.புரா அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட பிருத்விராஜிக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. இதனால் அவர் மேல்சிகிச்சைக்காக சிவமொக்காவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலன் அளிக்காமல் பிருத்விராஜ் இறந்து விட்டார். அவரது உடலை சுகாதாரத்துறையினர் எடுத்து சென்று மத்திய அரசு வழிகாட்டுதல்படி அடக்கம் செய்தனர். பிருத்விராஜ் இறந்ததால் நேற்று நடக்க இருந்த திருமணமும் நின்று போனது. இதனால் ஆயிரம் கனவுகளுடன் திருமணத்திற்கு தயாராகி இருந்த மணமகள் கண்ணீர் விட்டு அழுதார். அவரை குடும்பத்தினர் சமாதானப்படுத்தினர்.
இதுபோல சிக்கமகளூரு மாவட்டம் மூடிகெரே தாலுகா பன்னூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலு. இவரது மகன் ரோகித். இவர் ,டெல்லியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார். இந்தநிலையில் ரோகித்துக்கு கொரோனா தொற்று உறுதியாகி டெல்லி ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பெற்று வந்தார். ஆனாலும் சிகிச்சை பலனின்றி ரோகித் இறந்துவிட்டார். ரோகித்தின் உடல் டெல்லியிலேயே அடக்கம் செய்யப்பட்டதாக அவரது தந்தை பாலு கண்ணீர் மல்க தெரிவித்தார்.
Related Tags :
Next Story