கொளுத்தும் வெயிலால் மக்கள் அவதி சாலைகள் வெறிச்சோடின


கொளுத்தும் வெயிலால் மக்கள் அவதி சாலைகள் வெறிச்சோடின
x
தினத்தந்தி 30 April 2021 9:10 PM IST (Updated: 30 April 2021 9:10 PM IST)
t-max-icont-min-icon

கொளுத்தும் வெயிலால் புதுவை மக்கள் அவதி அடைந்து வருகிறார்கள். வெயில் காரணமாக மக்கள் நடமாட்டம் இன்றி சாலைகள் வெறிச்சோடின.

புதுச்சேரி, 

அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பே புதுவையில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. சாலைகளில் வெயில் கோர தாண்டவம் ஆடும் வகையில் நேற்று அனல் காற்று வீசியதால் சாலைகளில் வாகன நடமாட்டம் குறைந்து காணப்பட்டது.

தற்போது ஊரடங்கு காரணமாக சுற்றுலா தலமான புதுவையில் மக்கள் கூட்டம் அதிகம் இல்லை என்றாலும் வெயில் கொளுத்தியதால் பெரும்பாலானவர்கள் பகல் பொழுதில் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். சாலைகளில் போக்குவரத்து மற்றும் மக்கள் நடமாட்டம் அதிகம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க வாகன ஓட்டிகள் குளிர் கண்ணாடிகள், தொப்பி அணிந்தபடி செல்வதையும் காண முடிந்தது. சாலைகளில் நடந்து செல்பவர்கள் குடைபிடித்தபடி செல்கின்றனர்.

குறிப்பாக பெண்கள் தங்கள் சேலையாலும், சுடிதார் துப்பட்டாவினாலும் தலையையும், முகத்தையும் மூடிக்கொண்டு செல்வதை காண முடிகிறது. வெயிலின் தாக்கத்தை தாங்க முடியாமல் பொதுமக்கள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர்.

உடல் வெப்பத்தை தணிக்க பொதுமக்கள் பழச்சாறு, கரும்புச்சாறு, குளிர்பானங்கள் ஆகியவற்றை வாங்கி பருகி வருகின்றனர். இதுதவிர இளநீர், தர்பூசணி, வெள்ளரிக்காய், நுங்கு, வெள்ளரிப்பழம் ஆகியவற்றையும் மிகுந்த ஆர்வத்துடன் வாங்கி சாப்பிட்டு வருகிறார்கள்.

குறிப்பாக மருத்துவ குணம் உள்ள நுங்கு விற்பனை ஜோராக நடக்கிறது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி வாங்கி சாப்பிடுகின்றனர். இதன் காரணமாக வியாபாரிகள், புதுச்சேரி நகரின் பல்வேறு பகுதிகளில் சாலையோரங்களில் ஆங்காங்கே நுங்குவை குவித்து வைத்து விற்பனை செய்து வருகின்றனர்.

Next Story