ஊத்தங்கரை அருகே கார்-மோட்டார் சைக்கிள் மோதி தீப்பிடித்தது வாலிபர் சாவு; நண்பர் படுகாயம்
ஊத்தங்கரை அருகே காரும், மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்தில் வாலிபர் இறந்தார். அவருடைய நண்பர் படுகாயம் அடைந்தார்.
ஊத்தங்கரை:
ஊத்தங்கரை அருகே காரும், மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்தில் வாலிபர் இறந்தார். அவருடைய நண்பர் படுகாயம் அடைந்தார்.
இந்த விபத்து குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
கார்-மோட்டார் சைக்கிள் மோதல்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பழைய கடைவீதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 50). இவர் திருவண்ணாமலை மாவட்டத்தில் வட்டார கல்வி அலுவலராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி சித்ரா (45). இவர் கருவானூர் அரசு நடுநிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இவர்கள் 2 பேரும் ஊத்தங்கரை அருகே கெரிகேப்பள்ளி நோக்கி காரில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது பெங்களூருவை சேர்ந்த நந்து (30), அவருடைய நண்பர் சசி (25) ஆகிய 2 பேரும் ஊத்தங்கரையை நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டு இருந்தனர். வீரியம்பட்டி கூட்ரோடு தனியார் பள்ளி எதிரே தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது காரும், மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.
வாலிபர் சாவு
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். சிறிது நேரத்தில் காரும், மோட்டார் சைக்கிளும் திடீரென தீப்பிடித்து மளமளவென எரிந்தது. காரில் வந்த கோவிந்தராஜ், அவருடைய மனைவி சித்ரா ஆகியோர் கீழே குதித்து உயிர் தப்பினர். இதில் அவர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது. விபத்து குறித்து அக்கம் பக்கத்தினர் ஊத்தங்கரை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். பின்னர் விபத்தில் படுகாயம் அடைந்த நந்து, சசி ஆகிய 2 பேரையும் மீட்டு ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே நந்து பரிதாபமாக இறந்தார்.
விசாரணை
விபத்தில் படுகாயம் அடைந்த சசியை கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து ஊத்தங்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story