கழுத்தை நெரித்து மூதாட்டி கொலை
கழுத்தை நெரித்து மூதாட்டி கொலை
சரவணம்பட்டி
கோவையில் மூதாட்டியை கழுத்தை நெரித்து கொலை செய்து 10 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது
தனியார் பள்ளி அதிகாரி
நீலகிரி மாவட்டம் குன்னூரை சேர்ந்தவர் தியோ. இவருடைய மனைவி பிரேமா (வயது 65). இவர்களது மகள் மோனிஷா (31). இவருடைய கணவர் புவியரசன். மோனிஷாவுக்கு கோவை கோவில்பாளையத்தில் உள்ள தனியார் பள்ளியில் மேலாண்மை அதிகாரி வேலை பார்த்து வருகிறார்.
இதனால் கடந்த சில வருடங்களுக்கு முன்பு தியோ குடும்பத்தினர் கோவை வந்தனர். அவர்கள், சரவணம்பட்டியை அடுத்த விசுவாசபுரம் பகுதி டெக்ஸ்டூல் நகரில் மோனிஷாவிற்கு வீடு வாங்கிக் கொடுத்துள்ளார்.
தேர்தல் பணி
அந்த வீட்டில் மோனிஷா மற்றும் அவரது தாய் பிரேமா ஆகியோர் உள்ளனர். நேற்று காலை தேர்தல் பணி காரணமாக மோனிஷா பள்ளிக்கூடத் துக்கு சென்றார். வீட்டில் பிரேமா மட்டும் வீட்டில் தனியாக இருந்து உள்ளார். பணி முடிந்து மோனிஷா நேற்று மாலை 5 மணியளவில் வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் கதவு திறந்து கிடந்தது.
அதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டிற்குள் சென்று பார்த்தார். அப்போது வீட்டிற்குள் கட்டிலில் பிரேமா அசைவின்றி கிடந்தார். இதனால் மோனிஷா கூச்சலிட்டார். உடனே அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து பார்த்தனர்.
நகை கொள்ளை
மேலும் இது குறித்த தகவலின் பேரில் போலீஸ் துணை சூப்பிரண்டு சூரியமூர்த்தி, கோவில்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜீவராஜ மணிகண்டன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
இதில், பிரேமா கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டதும், அவருடைய கழுத்தில் கிடந்த தங்கச் செயின், தோடு, மோதிரம் உள்பட 10 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது.
மோனிஷா, மாலை 3 மணி அளவில் தனது தாயாருடன் செல்போனில் பேசி உள்ளார். ஆனால் அவர் மாலை 5 மணி அளவில் வீட்டிற்கு வந்த போது பிரேமா கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்துள்ளார்.
இதனால் மாலை 3 மணி முதல் 5 மணிக்குள் தான் மர்ம நபர்கள் புகுந்து மூதாட்டியை கொலை செய்து நகைகளை கொள்ளையடித்து இருக்க வாய்ப்பு உள்ளது. எனவே அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
விசாரணை
நகைக்காக பிரேமாவை மர்மநபர்கள் கொலை செய்தார்களா? அல்லது வேறு ஏதும் காரணம் உள்ளதா? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து கோவில்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story