4 சட்டமன்ற தொகுதிகளில் 6641 பேர் தபால் ஓட்டு போட்டுள்ளனர் கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் கிரண்குராலா தகவல்


4 சட்டமன்ற தொகுதிகளில் 6641 பேர் தபால் ஓட்டு போட்டுள்ளனர்  கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் கிரண்குராலா தகவல்
x
தினத்தந்தி 30 April 2021 10:38 PM IST (Updated: 30 April 2021 10:38 PM IST)
t-max-icont-min-icon

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 4 சட்டமன்ற தொகுதிகளிலும் நேற்று வரை 6 ஆயிரத்து 641 பேர் தபால் ஓட்டு போட்டுள்ளதாக கலெக்டர் கிரண்குராலா தெரிவித்தார்.


கள்ளக்குறிச்சி


கலெக்டர் ஆய்வு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உளுந்தூர்பேட்டை, ரிஷிவந்தியம், சங்கராபுரம், கள்ளக்குறிச்சி ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் கள்ளக்குறிச்சி ஏ.கே.டி.பொறியியல் கல்லூரி வாக்கு எண்ணிக்கை மையத்தில் வைக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை நாளை(ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. 
இதனையொட்டி வாக்கு எண்ணும் மையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான கிரண்குராலா நேரில் ஆய்வு செய்தார். 
அப்போது கள்ளக்குறிச்சி சப்-கலெக்டருமான ஸ்ரீகாந்த், மாவட்ட வருவாய் அலுவலர் விஜய்பாபு, கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொது) சுரேஷ், தேர்தல் நடத்தும் அலுவலர்கள் சரவணன், ராஜவேல், ராஜாமணி, பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் கவுதமன் ஆகியோர் உடன் இருந்தனர்.
பின்னர் அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தபால் ஓட்டு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதியில் மொத்தம் 1,569 வாக்குச்சாவடி மையங்களில் கடந்த 6-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் மொத்தமுள்ள 11 லட்சத்து 16 ஆயிரத்து 706 வாக்காளர்களில் 8 லட்சத்து 93 ஆயிரத்து 322 வாக்காளர்கள் வாக்களித்தனர். 
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளிலும் நேற்று வரையில் 6 ஆயிரத்து 641 பேர் தபால் ஓட்டு போட்டுள்ளனர். 

வாக்கு எண்ணிக்கை

வாக்கு எண்ணிக்கை மையத்தில் நாளை(ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணிக்கு தபால் வாக்குகள் எண்ணப்பட உள்ளது.  இதில் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதிக்கு 14 மேஜைகளில் 30 சுற்றுகளும், ரிஷிவந்தியம் தொகுதிக்கு 14 மேஜைகளில் 27 சுற்றுகளும், சங்கராபுரம் தொகுதிக்கு 14 மேஜைகளில் 27 சுற்றுகளும், கள்ளக்குறிச்சி தொகுதிக்கு 14 மேஜைகளில் 30 சுற்றுகளும் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. மேஜைகளுக்கு அருகே கண்காணிப்பு கேமரா அமைத்து ஒவ்வொரு சுற்றும் முறையாக கண்காணிக்கப்பட உள்ளது. 

முன்னேற்பாடு

வாக்கு எண்ணிக்கை பணியில் தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், இதர அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் காவல்துறையினர் உட்பட சுமார் 1,205 பேர் ஈடுபட உள்ளனர். இந்திய தேர்தல் ஆணையத்தின் கொரோனா பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளின்படி வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபட உள்ள அரசு அலுவலர்கள், பணியாளர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள், காவல்துறையினர் மற்றும் பத்திரிகையாளர்கள் ஆகியோர் கொரோனா தடுப்பூசி 2 தவணை செலுத்தியவர்கள் அல்லது கொரோனா பரிசோதனை நெகட்டிவ் சான்று உள்ளவர்கள் மட்டுமே வாக்கு எண்ணிக்கை மையத்தில் அனுமதிக்கப்படுவர். 
மேலும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வாக்கு எண்ணிக்கைக்கான அனைத்து முன்னேற்பாடு மற்றும் பாதுகாப்புகள் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். 


Next Story