குளிக்க சென்ற தொழிலாளி மின்சாரம் தாக்கி பலி காப்பாற்ற சென்ற மனைவியும் உயிரிழந்த பரிதாபம்


குளிக்க சென்ற தொழிலாளி மின்சாரம் தாக்கி பலி காப்பாற்ற சென்ற மனைவியும் உயிரிழந்த பரிதாபம்
x
தினத்தந்தி 30 April 2021 10:46 PM IST (Updated: 30 April 2021 10:46 PM IST)
t-max-icont-min-icon

கிணத்துக்கடவு அருகே ஆற்றுக்குள் மின்கம்பி அறுந்து கிடந்தது தெரியாமல் குளிக்க சென்ற தொழிலாளி மின்சாரம் தாக்கி பலியானார். அவரை காப்பாற்ற சென்ற மனைவியும் உயிரிழந்தார்.

கிணத்துக்கடவு

கிணத்துக்கடவு அருகே ஆற்றுக்குள் மின்கம்பி அறுந்து கிடந்தது தெரியாமல் குளிக்க சென்ற தொழிலாளி மின்சாரம் தாக்கி பலியானார். அவரை காப்பாற்ற சென்ற மனைவியும் உயிரிழந்தார். 

இந்த பரிதாப சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- 

தேங்காய் பறிக்கும் தொழிலாளி 

கேரள மாநிலம் கொடுவாயூரை சேர்ந்தவர் ராசு (வயது 52). இவருடைய மனைவி மல்லிகா (45). இவர்கள் 2 பேரும் கோவை மாவட்டம் ஆனைமலை அருகே உள்ள வளர்ந்தாய் மரத்தில் தங்கி இருந்து தேங்காய் பறிக்கும் தொழிலில் ஈடுபட்டு வந்தனர். 

இந்த நிலையில் கிணத்துக்கடவு அருகே உள்ள பொட்டையாண்டிபுறம்பு பகுதியில் உள்ள ராமராஜ் என்பவரது தோட்டத்தில் தேங்காய் பறிப்பதற்காக ராசு, அவருடைய மனைவி மல்லிகா மற்றும் வள்ளியம்மாள் (30) ஆகியோர் சென்றனர். 

குளிக்க சென்றார் 

தென்னை மரத்தில் ஏறி ராசு தேங்காய் பறித்து போட, அவற்றை மல்லிகா, வள்ளியம்மாள் ஆகியோர் சேகரித்து ஒரு இடத்தில் வைத்தனர். இந்த வேலை முடிந்ததும் ராசு, குளிப்பதற்காக அங்குள்ள முசலாங்கண்ணி பள்ள ஆற்றுக்கு சென்றார். 

நீண்ட நேரம் ஆகியும் அவர் தோட்டத்துக்கு திரும்பவில்லை. இதனால் மல்லிகா, வள்ளியம்மாள் ஆகியோர் அவரை சென்றனர். அப்போது அந்த ஆற்றுக்குள் ராசு மயங்கிய நிலையில் விழுந்து கிடந்தார். 

மின்சாரம் தாக்கி தம்பதி பலி 

அதை பார்த்து அதிர்ச்சி அடைந்த மல்லிகா ஓடிச்சென்று அவரை தூக்கி காப்பாற்ற முயன்றார். அப்போது அவரை மின்சாரம் தாக்கியது. இதனால் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். 

இதனால் அதிர்ச்சிக்குள்ளான வள்ளியம்மாள் இது குறித்து அக்கம் பக்கத்தினரிடம் தெரிவித்தார். இது குறித்து தகவல் அறிந்த கிணத்துக்கடவு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்த்தனர். 

அப்போது அந்த ஆற்றுக்குள் மின்கம்பி அறுந்து கிடந்ததும், தண்ணீரில் மின்சாரம் பாய்ந்து கொண்டு இருப்பதால், ராசுவும், மல்லிகாவும் மின்சாரம் தாக்கி பலியானது தெரியவந்தது. 

போலீஸ் விசாரணை 

இது குறித்து மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் உடனடியாக மின்சாரத்தை நிறுத்தினார்கள். பின்னர் பலியான ராசு, மல்லிகாவின் உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 

மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இது குறித்து போலீசார் கூறும்போது, ராசு குளிக்க சென்ற ஆற்றில் மின்சாரம் பாய்ந்ததால் அங்கு 4 பாம்புகள், ஏராளமான மீன்கள் செத்து மிதந்தன. 

அதை அவர் முதலில் பார்த்து இருந்தால், உயிரிழப்பு ஏற்பட்டு இருக்காது என்றனர். 


Next Story