வாக்கு எண்ணிக்கை மையத்தை ராமநாதபுரம் சரக டி.ஐ.ஜி. நேரில் ஆய்வு


வாக்கு எண்ணிக்கை மையத்தை ராமநாதபுரம் சரக டி.ஐ.ஜி. நேரில் ஆய்வு
x
தினத்தந்தி 30 April 2021 11:27 PM IST (Updated: 30 April 2021 11:27 PM IST)
t-max-icont-min-icon

காரைக்குடியில் உள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தை ராமநாதபுரம் சரக டி.ஐ.ஜி. நேரில் ஆய்வு செய்தார். அப்போது பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.

காரைக்குடி

காரைக்குடியில் உள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தை ராமநாதபுரம் சரக டி.ஐ.ஜி. நேரில் ஆய்வு செய்தார். அப்போது பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.

ஓட்டு எண்ணிக்கை

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குபதிவு கடந்த மாதம்(ஏப்ரல்) 6-ந்தேதி நடைபெற்றது.சிவகங்கை மாவட்டத்தை பொறுத்தவரை சிவகங்கை, காரைக்குடி, திருப்பத்தூர், மானாமதுரை(தனி) ஆகிய 4 சட்டமன்ற தொகுதியில் பதிவான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் காரைக்குடி அழகப்பா அரசு பொறியியல் கல்லூரி மற்றும் அழகப்பா பாலிடெக்னிக் கல்லூரியில் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு உள்ளது. அங்கு 24 மணி நேரமும் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது.
சட்டமன்ற தேர்தலுக்கான ஓட்டு எண்ணிக்கை நாளை(ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.

டி.ஐ.ஜி. நேரில் ஆய்வு

இந்த நிலையில் வாக்கு எண்ணிக்கையில் கலந்துகொள்ள உள்ள அரசியல் கட்சி முகவர்கள், அரசு அலுவலர்கள், பத்திரிகையாளர்கள் ஆகியோருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் அரசியல் கட்சி முகவர்கள் வரும் பாதை, வேட்பாளர்கள் வரும் பாதை, தனித்தனியாக அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று காரைக்குடி வந்த ராமநாதபுரம் சரக டி.ஐ.ஜி மயில்வாகனன் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் பொறியியல் கல்லூரி மற்றும் பாலிடெக்னிக் கல்லூரியில் போலீசாருடன் ஆலோசனை நடத்தினார். மேலும் அங்குள்ள கண்காணிப்பு கேமரா கட்டுப்பாட்டு அறையில் உள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் ஆய்வு செய்தார்.
தடுப்பு வேலிகள்
 வாக்கு எண்ணிக்கை நடைபெறும் தினத்தன்று காரில் வரும் அரசியல் கட்சி பிரமுகர்கள் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு அப்பால் வாகனங்களை நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. வேட்பாளர்கள், தேர்தல் அலுவலர்கள், அரசு அதிகாரிகள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களின் கார் மட்டும் வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் அனுமதிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். மேலும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் அறை, மின்னணு வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்ட அறையின் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்தார்.
 டி.ஐ..ஜி ஆய்வின் போது சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜராஜன், போலீஸ் துணை சூப்பிரண்டுகள் அருண் (காரைக்குடி), பொன்ரகு (திருப்பத்தூர்), சுந்தரமாணிக்கம் (மானாமதுரை), பால்பாண்டி (சிவகங்கை), சபாபதி (தேவகோட்டை) மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தரமகாலிங்கம், சப்-இன்ஸ்பெக்டர்கள் முத்துக்கிருஷ்ணன், தவமுனி, தினேஷ் மற்றும் போலீசார் உடனிருந்தனர்.

Next Story