26 முதல் 32 சுற்றுகளில் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும்
26 முதல் 32 சுற்றுகளில் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் என்று கலெக்டர் தெரிவித்தார்.
ராமநாதபுரம்,
ராமநாதபுரத்தில் 4 தொகுதி வாக்கு எண்ணிக்கையின்போது 26 முதல் 32 சுற்றுகளில் எண்ணி முடிவுகள் அறிவிக்கப்படும் என்று வாக்கு எண்ணிக்கை மைய பாதுகாப்பு ஏற்பாடுகளை பார்வையிட்டபின் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்தார்.
பாதுகாப்பு ஏற்பாடு
ராமநாதபுரம் அண்ணா பல்கலைக்கழக அரசு பொறியியல் கல்லூரியில் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெற உள்ளது. அதையொட்டி மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக் ஆகியேர், பாதுகாப்பு முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்து நேரில் ஆய்வு செய்தனர்.
அப்போது கலெக்டர் கூறியதாவது:- ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை காலை 8 மணி முதல் ராமநாதபுரம் அண்ணா பல்கலைக்கழக அரசு பொறியியல் கல்லூரியில் நடைபெற உள்ளது.
14 மேஜைகளில் எண்ணிக்கை
இந்திய தேர்தல் ஆணையத்தின் ஆணையின்படி மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் பதிவான வாக்குகளை எண்ணுவதற்கு ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு தலா 14 மேஜைகளும், தபால் வாக்குகளை எண்ணுவதற்கு தலா 8 மேஜைகளும் நிர்ணயிக்கப்பட்ட அறைகளில் தனித்தனியாக அமைக்கப்படும். ஒவ்வொரு மேஜையிலும் ஒரு நுண்பார் வையாளர், வாக்கு எண்ணிக்கை மேற்பார்வையாளர், வாக்கு எண்ணிக்கை உதவியாளர் பணியில் ஈடுபடுவார்கள்.
26 முதல் 32 சுற்றுகளில்
வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கான சட்டமன்றத் தொகுதி மற்றும் எந்த மேஜையில் பணியாற்ற வேண்டும் என்பது குறித்து கணினி முறையில் பணி ஒதுக்கீடு செய்யப்படும். பரமக்குடி தொகுதிக்கு 26 சுற்றுகள், திருவாடானை தொகுதிக்கு 30 சுற்றுகள், ராமநாதபுரம் தொகுதிக்கு 31 சுற்றுகள், முதுகுளத்தூர் தொகுதிக்கு 32 சுற்றுகள் என முறையே வாக்குகள் எண்ணப்படும்.
ஒரு சுற்று எண்ணிக்கைக்கான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பு அறையில் இருந்து எடுக்கப்பட்டு சுற்று முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்பு, அடுத்த சுற்றுக்கான வாக்குப்பதிவு எந்திரங்கள் எடுக்கப்படும். அந்தந்த சட்டமன்ற தொகுதிக்கான தேர்தல் நடத்தும் அலுவலர் ஒவ்வொரு சுற்று வாரியாக மொத்த வாக்கு எண்ணிக்கை விவரங்களை அறிவிப்பார்.
கொரோனா சான்றிதழ்
தேர்தல் ஆணையம் அறிவுரையின்படி, தேர்தல் வாக்கு எண்ணும் மையத்திற்குள் வரும் பணியாளர்கள், வேட்பா ளர்கள், வேட்பாளர்களின் முகவர்கள், பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சி ஊடகத்துறையினர் உட்பட அனைவருக்கும் கொரோனா பரிசோதனை சான்று அல்லது கொரோனா தடுப்பூசி இரண்டு தவணை போட்டுக் கொண்ட சான்று அவசியம். வாக்கு எண்ணும் மையத்திற்குள் கைபேசி கொண்டு செல்ல அனுமதி இல்லை. வாக்கு எண்ணும் மையத்திற்குள் வரும் அனைவருக்கும் தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்த பின்னரே அனுமதிக்கப்படுவர். மேலும், வாக்கு எண்ணும் மையத்திற்குள் அனைவரும் முககவசம் அணிதல், சானிடைசர் பயண்படுத்துதல், சமூக இடைவெளி கடைபிடித்தல் உள்ளிட்ட அரசு வரையறுத்துள்ள அனைத்து கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளையும் கட்டாயம் பின்பற்றப்படுவதை உறுதி செய்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.இவ்வாறு கூறினார்.
தேர்தல் அலுவலர்கள்
இந்த ஆய்வின் போது, சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் நடத்தும் அலுவலர்கள் ராமநாதபுரம் சப்-கலெக்டர் சுகபுத்ரா, பரமக்குடி ஆர்.டி.ஓ.தங்கவேல், முதுகுளத்துர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் குருசந்திரன், திருவாடானை மாவட்ட வழங்கல் அலுவலர் மங்கலநாதன், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஜெயசிங், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் செந்தில் குமார், சுகாதாரத்துறை துணை இயக்குனர் பொற்கொடி, ஊராட்சிகளின் உதவி இயக்குநர் கேசவதாசன் உட்பட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story