கொரோனா பரவலை கட்டுப்படுத்த நெல்லையில் நவீன கட்டுப்பாட்டு அறை- கலெக்டர் விஷ்ணு தொடங்கி வைத்தார்
கொரோனா பரவலை கட்டுப்படுத்த நெல்லையில் நவீன கட்டுப்பாட்டு அறையை கலெக்டர் விஷ்ணு தொடங்கி வைத்தார்.
நெல்லை, மே:
கொரோனா பரவலை கட்டுப்படுத்த நெல்லையில் நவீன கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு உள்ளது. இதனை கலெக்டர் விஷ்ணு தொடங்கி வைத்தார்.
நவீன கட்டுப்பாட்டு அறை
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் இணையதள வசதி, தொலைத்தொடர்பு வசதிகளுடன் கூடிய நவீன கொரோனா கட்டுப்பாடு அறை அமைக்கப்பட்டு உள்ளது. இதனை கலெக்டர் விஷ்ணு நேற்று தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் கூறியதாவது:-
பதிவேற்றம்
கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இக்கட்டான நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை அதிகமாக கவனிக்க வேண்டி உள்ளது. இதையொட்டி நெல்லை மாவட்ட நிர்வாகம் கொரோனா கட்டுப்பாட்டு அறையை புதிதாக உருவாக்கி உள்ளது.
இதில் புதிய இணையதளம் மற்றும் தகவல் தொடர்பு வசதிகளும் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இந்த கட்டுப்பாட்டு அறையில் தினமும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நெல்லை மாவட்டத்தை சேர்ந்த அனைத்து நோயாளிகளின் விவரங்களும், கொரோனா சோதனை மையங்களில் இருந்து பெறப்பட்டு, இதற்காக உருவாக்கப்பட்டுள்ள புதிய இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும்.
கேள்விகள்
உடனடியாக கட்டுப்பாட்டு அறையில் பணியில் இருக்கும் சுகாதார துறை பணியாளர்கள், சம்பந்தப்பட்ட நபர்களை இதற்காக புதிதாக தயாரிக்கப்பட்ட கணினி மென்பொருள் வழியாக நேரடியாக தொடர்பு கொள்வார்கள்.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெறும் முறை, அவர்கள் வெளியூர் சென்றிருந்த விவரங்கள், அவர்களிடம் நேரடி தொடர்பில் இருந்தவர்களின் விவரங்கள், அவர்கள் தடுப்பூசி எடுத்துக் கொண்ட விவரம் போன்ற 10-க்கும் மேற்பட்ட கேள்விக்கான தகவல்களை இந்த இணையதளத்தில் பதிவு செய்வார்கள்.
14 நாட்கள் கண்காணிப்பு
குறிப்பாக வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட நபர்கள் அனைவரும் அடுத்து வரக்கூடிய 14 நாட்களுக்கு, நமது மாவட்ட கட்டுப்பாட்டு அறையின் தொடர் கண்காணிப்பில் இருப்பார்கள். வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்களிடம் தினமும் அவர்களின் உடல்நிலை, அவர்கள் உட்கொள்ளும் மருந்து போன்ற அனைத்து விவரங்களையும் மென்பொருள் மூலமான தொலைபேசியில் கேட்டு, அவர்கள் தெரிவிக்கும் விவரங்களை பதிவு செய்வார்கள்.
இந்த தகவல் மூலம் கிடைக்கும் விவரங்களின் அடிப்படையில் மாவட்ட நிர்வாகத்துக்கு தேவையான நுண் அறிக்கைகளையும், ‘பிக் டேட்டா’ என்ற தொழில்நுட்பத்தின் அடிப்படையில் எளிதாக தயாரித்து, மாவட்ட அளவில் அனைத்து பகுதிகளுக்கும் தேவையான கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில், சேரன்மாதேவி உதவி கலெக்டர் பிரதீக் தயாள், மாவட்ட வருவாய் அலுவலர் (ஒழுங்கு நடவடிக்கை ஆணையர்) சுகன்யா, பயிற்சி உதவி கலெக்டர் அனிதா, தேசிய தகவல் மைய மேலாளர்கள் தேவராஜன், ஆறுமுகநயினார், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் மகாகிருஷ்ணன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story