தஞ்சையில் இறைச்சி-மீன்கள் வாங்க ஆர்வம் காட்டிய மக்கள்
2 நாட்கள் கடைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் தஞ்சையில் இறைச்சி-மீன்கள் வாங்க மக்கள் ஆர்வத்துடன் வந்தனர்.
தஞ்சாவூர்;
2 நாட்கள் கடைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் தஞ்சையில் இறைச்சி-மீன்கள் வாங்க மக்கள் ஆர்வத்துடன் வந்தனர்.
முழு ஊரடங்கு
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை தடுக்க பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை தமிழகஅரசு அமல்படுத்தி உள்ளது.
ஓட்டல்களில் சாப்பாடு பார்சல் மட்டுமே வழங்க வேண்டும். பஸ்களில் இருக்கையில் அமர்ந்து பயணம் செய்ய வேண்டும். 3 ஆயிரம் சதுரஅடிக்கு மேல் பரப்பளவு கொண்ட கடைகள் மூடப்பட வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் ஒன்று கூடுவதை தவிர்க்கவே இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு என்பதால், பொதுமக்கள்மீன்கள், ஆட்டிறைச்சி, கோழி இறைச்சி வாங்க, மீன் மார்க்கெட் மற்றும் இறைச்சி கடைகளில் முந்தைய நாளான சனிக்கிழமையே குவிந்துவிடுகின்றனர்.
இறைச்சி கடைகள் இன்றும் அடைப்பு
இதனால் எந்த நோக்கத்திற்காக ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்துகிறோமோ? அந்த நோக்கமே சிதைந்துவிடும் அளவுக்கு சமூக இடைவெளியின்றி குவிந்த மக்களால், கொரோனா பரவல் அதிகரிக்கும் அபாயம் ஏற்படுகிறது. இதை தவிர்க்க ஊரடங்கிற்கு முந்தைய நாள், இறைச்சி கடைகளில் மக்கள் குவிவதை தவிர்க்க, சனிக்கிழமையும் இறைச்சி கடைகளை மூட தமிழகஅரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதன்படி தஞ்சை கீழவாசல், யாகப்பாநகர், தொம்பன்குடிசை உள்ளிட்ட தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள மீன் மார்க்கெட், மீன் கடைகள், இறைச்சி கடைகள், கோழிக்கடைகள் இன்று(சனிக்கிழமை) முழுமையாக மூடப்படுகிறது. இதை மீறுவோர் மீது,நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தமிழகஅரசு அறிவித்துள்ளது.
ஆர்வத்துடன் வந்த மக்கள்
2 நாட்கள் இறைச்சி கடைகள், மீன் மார்க்கெட் மூடப்படும் என்பதால் தஞ்சை கீழவாசல் பகுதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள இறைச்சி கடைகளில் வழக்கத்தைவிட மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. வெள்ளிக்கிழமை என்றாலே இறைச்சி கடைகளை பெரும்பாலோனோர் திறப்பது கிடையாது. அப்படி திறக்காமல் இருந்தவர்களில் சிலர் கூட கடைகளை நேற்று திறந்து இருந்தனர். சிலர் வழக்கம்போல் திறக்காமல் இருந்தநிலையில் அவர்களது செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு வாடிக்கையாளர்கள் கடைகளை எப்போது திறப்பீர்கள் என கேட்டனர்.
பொதுவாக வெள்ளிக்கிழமை அன்று இறைச்சி கடைகளில் விற்பனை மிக குறைவாகவே காணப்படும். ஆனால் நேற்று மக்கள் அதிகஅளவில் ஆர்வத்துடன் கூடி, தங்களுக்கு தேவையான இறைச்சிகளை வாங்கி சென்றனர். தஞ்சை கீழவாசலில் மீன்மார்க்கெட் உள்ளது. இந்த மீன்மார்க்கெட்டில் 56 சில்லறை மீன் விற்பனை கடைகள் உள்ளன.
நாகை, காரைக்கால், கன்னியாகுமரி, கடலூர், சென்னை, ராமேஸ்வரம், தூத்துக்குடி, அதிராம்பட்டினம், கோட்டைப்பட்டினம் ஆகிய கடலோர பகுதிகளில் இருந்தும், கேரளா, ஆந்திரா, கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் இருந்தும் கடல் மீன்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன.
மீன்கள்
கடந்த மாதம் 15-ந் தேதி முதல் மீன்பிடி தடைகாலம் தொடங்கி உள்ளதால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் தஞ்சை மீன்மார்க்கெட்டுக்கு கடல் மீன்கள் வரத்து வெகுவாக குறைந்துள்ளது. கிளங்கா மீன், சங்கரா, கெளுத்தி, வஞ்சரை, வாவல், சீலா போன்ற கடல் மீன்கள் குறைந்த அளவு வந்ததால் அவற்றின் விலை உயர்ந்திருந்தது. அதே நேரத்தில் நாட்டு மீன்கள் வரத்து அதிகரித்து இருந்தது.
2 நாட்கள் மீன்மார்க்கெட் விடுமுறை என்பதால் வெள்ளிக்கிழமையையும் பொருட்படுத்தாமல் நிறைய பேர் வந்திருந்து மீன்களை வாங்கி சென்றனர்.
Related Tags :
Next Story