பஸ்சில் பெண்ணிடம் திருடுபோன பணத்தை அரை மணி நேரத்தில் மீட்ட போலீசார்
வாசுதேவநல்லூரில் பஸ்சில் பெண்ணிடம் திருடுபோன பணத்தை அரை மணி நேரத்தில் போலீசார் மீட்டனர்.
வாசுதேவநல்லூர், மே:
புளியங்குடி நடுக்கருப்ப அழகு தெருவைச் சேர்ந்தவர் கருப்பையா. இவருடைய மனைவி கருமாரியம்மாள் (வயது 34). சம்பவத்தன்று மாலையில் இவர் வாசுதேவநல்லூர் செல்வதற்காக புளியங்குடியில் இருந்து மதுரை செல்லும் அரசு பஸ்சில் சென்றார். வாசுதேவநல்லூர் சென்றதும் தான் வைத்திருந்த பையில் இருந்த மணிபர்ஸ் திருடு போனதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். அதில் 7 பவுன் நகை, செல்போன் மற்றும் பணம் இருந்தது.
இதுகுறித்து கருமாரியம்மாள் உடனடியாக வாசுதேவநல்லூர் போலீசில் புகார் செய்தார். உடனே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் வேல்பாண்டியன், நவமணி ஆகியோர் ஜீப்பில் விரைந்து சென்று, சிவகிரியில் அந்த அரசு பஸ்சை நிறுத்தி சோதனை நடத்தினர். அப்போது மணிபர்சை திருடிய நபர் அதை நைசாக கீழே போட்டு விட்டு சென்று விட்டார். பஸ்சில் கிடந்த மணிபர்சை போலீசார் எடுத்து பார்த்தபோது, அதில் கருமாரியம்மாளின் 7 பவுன் நகை, செல்போன், பணம் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவற்றை கருமாரியம்மாளிடம் ஒப்படைத்தனர். போலீசார் விரைந்து செயல்பட்டு, திருடுபோன பணத்தை ½ மணி நேரத்தில் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்ததை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுகுணாசிங், புளியங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு சுவாமிநாதன் மற்றும் பயணிகள், பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.
Related Tags :
Next Story