குடிபோதையில் விபத்து ஏற்படுத்திய போலீஸ்காரர் பணியிடை நீக்கம்


குடிபோதையில் விபத்து ஏற்படுத்திய போலீஸ்காரர் பணியிடை நீக்கம்
x
தினத்தந்தி 30 April 2021 7:59 PM GMT (Updated: 30 April 2021 8:07 PM GMT)

ஊட்டி அருகே குடிபோதையில் விபத்து ஏற்படுத்திய போலீஸ்காரர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

ஊட்டி,

நீலகிரி மாவட்டம் குன்னூர் மதுவிலக்கு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டரின் ஜீப் டிரைவராக மெல்வின் (வயது 29) என்ற போலீஸ்காரர் இருந்தார். அவர் ஊட்டி ஆயுத படையில் பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் மெல்வின் நேற்று முன்தினம் இரவு போலீஸ் இன்ஸ்பெக்டரை வாக்கு எண்ணும் மைய பாதுகாப்பு பணிக்கு அழைத்து வருவதற்காக ஜீப்பை எடுத்துக்கொண்டு ஊட்டியில் இருந்து குன்னூரை நோக்கி சென்று கொண்டு இருந்தார்.

நொண்டிமேடு பகுதியில் சென்றபோது, எதிரே மணியட்டி கிராமத்தில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு ஊட்டியை நோக்கி வந்த அரசு பஸ் மீது ஜீப் திடீரென மோதி விபத்துக்குள்ளானது.

இதில் ஜீப்பின் முன்பகுதி சேதமடைந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதனால் பஸ்சில் இருந்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். விபத்து காரணமாக ஊட்டி-குன்னூர் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஜீப்பை ஓட்டி வந்த போலீஸ்காரர் மெல்வின் குடிபோதையில் இருந்ததும், சாலையில் வலதுபுறமாக சென்று விபத்தை ஏற்படுத்தியதும் தெரியவந்தது. இதுகுறித்து ஊட்டி நகர மத்திய போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து மெல்வினை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் மது அருந்தி இருந்தது உறுதி செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து குடிபோதையில் விபத்தை ஏற்படுத்தியதாக நேற்று மெல்வின் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பணியின்போது மது அருந்தி போலீஸ்காரர் விபத்து ஏற்படுத்திய சம்பவம் ஊட்டியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இதற்கிடையே இந்த சம்பவம் தொடர்பாக போலீஸ்காரர் மெல்வினை நீலகிரி போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜன் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

Next Story