வெள்ளரிக்காய் விற்பனை மும்முரம்
சாத்தூர் பகுதியில் வெள்ளரிக்காய் விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது.
சாத்தூர்,
சாத்தூர் பகுதியில் வெள்ளரிக்காய் விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது.
கடும் வெயில்
சாத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக கடுமையான வெயில் அடித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர அச்சப்படுகின்றனர்.
வெயிலின் தாக்கத்தில் இருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாக்க இளநீர், தர்ப்பூசணி, நுங்கு, பதனீர் ஆகியவற்றை நாடி செல்கின்றனர். அதேபோல கரும்புச்சாறு, நீர்மோர் உள்ளிட்ட குளிர்பானங்களையும் அதிகமாக அருந்துகின்றனர்.
இந்தநிலையில் சாத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வெள்ளரிக்காய் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது.
வெள்ளரிக்காய் சாகுபடி
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-
சாத்தூர், வன்னிமடை, கொல்லபட்டி, கலிங்கப்பட்டி, கோசுகுண்டு, நத்தத்துப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் வெள்ளரிக்காய் சாகுபடி செய்யபட்டுள்ளது.
இந்த காய்கள் தற்போது சாத்தூர், சிவகாசி, கோவில்பட்டி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் உள்பட மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது. இந்த பகுதியில் உள்ள கரிசல் மண் வெள்ளரிக்காய் சாகுபடி செய்வதற்கு ஏற்றதாகும். ஆதலால் இங்கு விளையும் காய்கள் மிகவும் நன்றாகவும், சுவையாகவும் இருக்கும்.
வைப்பாறு
மேலும் அதிக அளவில் பயிரிடும் வெள்ளரிக்காய்களை விவசாயிகளிடமிருந்து மொத்தமாக விலை பேசி வியாபாரிகள் நெல்லை, தூத்துக்குடி, மார்த்தாண்டம், கோவை உள்பட பல்வேறு மாவட்டங்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும் பஸ் மற்றும் ரெயில் மூலம் அனுப்பி விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது.
தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வெள்ளரிக்காய் பயிரிடப்பட்டாலும் சாத்தூர் வெள்ளரிக்காய்கள் தனிச் சுவைமிக்கதாக விளங்குகிறது. இதற்கு காரணம் சாத்தூர் பகுதியில் உள்ள கரிசல் மண் மற்றும் வைப்பாற்றின் நீரின் குணமும் ஆகும்.
மருத்துவ குணங்கள்
இது சுவையானது மட்டுமில்லாமல் கோடை காலத்திற்கு மனித உடலுக்கு தேவையான நீர்ச்சத்தினை அளிக்கின்றது. வெள்ளரிக்காயில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் அதிகமாக உள்ளன.
மானிய விலையில் விதைகள் மற்றும் பூச்சி மருந்துகளை விவசாயிகளுக்கு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போது தான் விளைச்சலை மேம்படுத்த முடியும்.
நிவாரணம்
மேலும் கோடைகாலத்தில் வெள்ளரிக்காய்க்கு அடுத்தபடியாக மக்களின் தாகத்தை தீர்க்க மக்கள் நாடுவது தண்ணீர் பழத்தை தான்.
இந்த தண்ணீர் பழத்தில் அதிகப்படியான நீர்ச்சத்து உள்ளதால் மக்கள் அதனை விரும்பி வாங்குகின்றனர். கஷ்டப்பட்டு உழைக்கும் விவசாயிகளுக்கு ஏற்ற வருவாய் கிடைப்பதில்லை. எனவே விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் மானியத்துடன் விதை, உரம், பூச்சிக்கொல்லி மருந்து ஆகியவற்றை வழங்குவதுடன், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணமும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story