மூதாட்டியிடம் 13 பவுன் நகைகளை அபேஸ் செய்த 2 பெண்கள் கைது
வங்கி மேலாளர் போல் நடித்து மூதாட்டியிடம் 13 பவுன் நகைகளை அபேஸ் செய்த 2 பெண்கள் கைது
மதுரை
மதுரையில் வங்கி மேலாளர் போல் நடித்து மூதாட்டியிடம் 13 பவுன் நகைகளை அபேஸ் செய்த 2 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
நகையை வாங்கிய பெண்
மதுரை அண்ணாநகர் கிழக்கு தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மனைவி முத்து(வயது 61). இவர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கொடுத்துள்ள புகாரில் கூறியிருப்பதாவது:-
எனக்கு வண்டியூர் பி.கே.எம் நகரைச் சேர்ந்த பிரதீப்குமார் மனைவி அபிநயா(32) என்பவருடன் பழக்கம் உண்டு. அவர், ஒரு திருமண நிகழ்ச்சிக்கு செல்ல உள்ளேன். என் நகைகள் அனைத்தும் வங்கியில் அடமானத்தில் உள்ளது. எனவே உங்களின் தங்கச்சங்கிலியை தாருங்கள். திருமணத்துக்கு சென்று வந்த பிறகு திருப்பித் தந்து விடுகிறேன் என்று கூறினார். இதை நம்பிய நான், அபிநயாவிடம் 2 பவுன் தங்கச்சங்கிலியை கழற்றி கொடுத்தேன். அவர் திருமணத்திற்கு சென்று வந்த பிறகும் நகையை திருப்பி தரவில்லை.
வங்கி அதிகாரி போல் நடித்து
ஒருநாள் எனக்கு, அபிநயாவிடம் இருந்து போன் வந்தது. நான் வங்கியில் உள்ள என் நகைகளை மீட்க போகிறேன். எனவே நீங்கள் மேலமாசிவீதி பகுதிக்கு வாருங்கள், அங்கு உங்களின் நகையை திருப்பித் தருகிறேன் என்றார். நான் அந்த வங்கிக்கு சென்றேன். அப்போது அபிநயா என்னிடம் மீனா என்ற பெண்ணை அறிமுகப்படுத்தினார். இவர் தான் இந்த வங்கியின் மேலாளர். என் நகைகளின் மதிப்பு அடமானம் வைத்த மதிப்புக்கு மேலே சென்று விட்டது. எனவே நீங்கள் போட்டிருக்கும் நகைகளை கழற்றி தாருங்கள். இதன் மூலம் நான் என் நகைகளை மீட்டு கொள்கிறேன். அதன் பிறகு என் நகைகளை விற்று அதில் கிடைக்கும் பணத்தில் உங்களின் நகையை திருப்பி தந்து விடுகிறேன் என்றார்.
அதனை நம்பிய நான் அவர்களிடம் 11 பவுன் தங்கச்சங்கிலியை கழற்றி கொடுத்தேன். அதை வாங்கிய அவர்கள் வங்கியில் நகை அடகு வைக்க வேண்டும் என்றால் போட்டோ எடுக்க வேண்டும் என்று கூறி என்னை ஒரு போட்டோ ஸ்டூடியோவுக்கு அழைத்து சென்றனர். அங்கு அவர்கள் என்னிடம் நகை அடகு வைப்பது தொடர்பாக ஒரு சில ஆவணங்களை வாங்க வேண்டியுள்ளது. எனவே நீங்கள் இங்கு காத்திருங்கள். சிறிது நேரத்தில் வந்து விடுகிறோம் என்று கூறி அங்கிருந்து சென்றனர். அதன் பிறகு அவர்கள் திரும்பி வரவே இல்லை. எனவே நான் வங்கிக்கு சென்று விசாரித்தேன். அப்போது மீனா என்பவர் அந்த வங்கியின் மேலாளரே இல்லை என்று தெரியவந்தது. எனவே அவர்களை கண்டுபிடித்து எனது நகையை மீட்டு தர வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியிருந்தார்.
தனிப்படை அமைப்பு
இது தொடர்பாக மாநகர போலீஸ் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்கா உத்தரவின்பேரில் மாநகர குற்றப்பிரிவு போலீஸ் துணை கமிஷனர் ராஜசேகர் மேற்பார்வையில் திலகர் திடல் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுஜாதா, தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் மரியசெல்வம், கணேசன், போத்திராஜ், ஏட்டுகள் ஜெகதீசன், சுந்தர் மற்றும் அன்பழகன் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.
இதைதொடர்ந்து தனிப்படை போலீசார் மதுரை மேலமாசி வீதியில் உள்ள வங்கிக்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் அங்கு இருந்த கண்காணிப்பு கேமிராவை கைப்பற்றி ஆய்வு செய்தனர். அதில் முத்துவை 2 பெண்கள் வங்கிக்குள் அழைத்து வருவது தெரியவந்தது. அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர்கள் மதுரையில் ஒரு வீட்டில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. உடனே போலீசார் அந்த இடத்திற்கு விரைந்து சென்றனர்.
2 பெண்கள் கைது
அப்போது அவர்கள் போலீசாரை கண்டதும் தப்பி செல்ல முயன்றனர். ஆனால் போலீசார் அவர்களை சுற்றி வளைத்து பிடித்து விசாரித்தனர். அதில் வண்டியூரை சேர்ந்த அபிநயா(32), சிவகங்கை மாவட்டம் இளமனூரை சேர்ந்த மீனா(61) என்பதும், அவர்கள் தான் நகையை அபகரித்ததும் தெரியவந்தது. பின்னர் போலீசார் அவர்கள் இருவரையும் கைது செய்து, அவர்களிடமிருந்த 12 பவுன் நகைகளை மீட்டனர்.
பின்னர் போலீசார் அவர்கள் இருவரையும் திலகர்திடல் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவத்தில் விரைந்து செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்த தனிப்படை போலீசாரை போலீஸ் கமிஷனர் பாராட்டினார்.
Related Tags :
Next Story