கிராமங்களுக்குள் வந்த 2 புள்ளிமான்கள் மீட்பு
தா.பழூர் அருேக கிராமங்களுக்குள் வந்த 2 புள்ளிமான்கள் மீட்கப்பட்டன.
தா.பழூர்,
அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள கீழமைக்கேல்பட்டி கிராமத்தில் நேற்று காலை ஒரு புள்ளிமான் சாலையில் திரிந்தது. இதையடுத்து அப்பகுதியில் சுற்றித்திரிந்த நாய்கள், புள்ளிமானை விரட்டின. அதை பார்த்த அப்பகுதி இளைஞர்கள், நாய்களை விரட்டி, புள்ளிமானை மீட்டனர். இது பற்றி தா.பழூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதேபோல் தா.பழூர் அருகே உள்ள வேணாநல்லூர் கிராமத்தில் ஒரு குட்டி புள்ளிமான், மாரியம்மன் கோவில் அருகில் உள்ள குளக்கரையில் இருந்தது. அதனை மீட்ட கிராம மக்கள் தா.பழூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து கிராம மக்கள் கூறுகையில், காலையில் தண்ணீர் தேடி இந்த பகுதிக்கு கூட்டமாக புள்ளிமான்கள் வந்திருக்கலாம். ஒரு பெரிய புள்ளி மானும், 4 குட்டிகளும் இருந்தன. குளக்கரையில் மனிதர்களைப் பார்த்து திசைக்கொன்றாக மான்கள் தப்பியோடியபோது, ஒரு மான்குட்டி மட்டும் அந்த கிராமத்தில் சுற்றியது. மற்ற மான்கள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டன. வேணாநல்லூர், கீழமைக்கேல்பட்டி ஆகிய கிராமங்களை ஒட்டிய பகுதிகளில் முந்திரி காடுகள் அதிகமாக உள்ளன. நேற்று பிடிபட்ட மான்கள் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளில் இருந்து உணவுக்காக சிறிது, சிறிதாக புலம்பெயர்ந்து இந்த பகுதியில் கூட்டமாக தங்கி இருக்கலாம். அதில் சில மான்கள் தண்ணீர் தேடி இந்த பகுதிக்கு வந்திருக்கலாம், என்று தெரிவித்தனர்.
இதற்கிடையே மான்கள் மீட்கப்பட்டது தொடர்பாக தா.பழூர் போலீசார் அளித்த தகவலின்பேரில் வனக்காவலர்கள் மணிமேகலை மற்றும் செல்வதுரை ஆகியோர் சம்பவ இடங்களுக்கு விரைந்து வந்து மான்களை மீட்டனர். கீழமைக்கேல்பட்டியில் மீட்கப்பட்ட 2 வயது பெண் புள்ளிமான், முன்னதாக கம்பி வேலிகளில் தாவி குதித்து ஓட முயன்றபோது சிறுசிறு காயங்கள் ஏற்பட்டிருந்தன. அவற்றுக்கு தா.பழூர் கால்நடை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் அந்த பெண் மான் சினையாக இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது. சிகிச்சைக்கு பின்னர் வனத்துறையினர், அந்த மான்களை பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் விடுவதற்காக கொண்டு சென்றனர்.
Related Tags :
Next Story