இடைத்தேர்தல் நடந்த 3 தொகுதிகளில் நாளை ஓட்டு எண்ணிக்கை


இடைத்தேர்தல் நடந்த 3 தொகுதிகளில் நாளை ஓட்டு எண்ணிக்கை
x
தினத்தந்தி 30 April 2021 8:34 PM GMT (Updated: 30 April 2021 8:34 PM GMT)

இடைத்தே்ாதல் நடந்த 3 தொகுதிகளில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது.

பெங்களூரு: இடைத்தே்ாதல் நடந்த 3 தொகுதிகளில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது.

ஓட்டுப்பதிவு எந்திரங்கள்

கர்நாடக சட்டசபையில் காலியாக உள்ள பசவகல்யாண், மஸ்கி மற்றும் பெலகாவி மக்களவை ஆகிய தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் மாதம் 17-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. 

இந்த தேர்தலில் பெலகாவி மக்களவை தொகுதியில் காங்கிரஸ் சார்பில் சதீஸ் ஜார்கிகோளியும், பா.ஜனதா சார்பில் மங்களா சுரேஷ் அங்கடியும், மஸ்கி தொகுதியில் பா.ஜனதா சார்பில் பிரதாப்கவுடா பட்டீல், காங்கிரஸ் சார்பில் பசனகவுடா துருவிஹல், பசவகல்யாண் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் மல்லம்மா, பா.ஜனதா சார்பில் சரனு சலகார், ஜனதா தளம் (எஸ் சார்பில் சையத் யஷரப்அலி ஆகியோர் போட்டியிட்டனர். 

இந்த தேர்தலில் பெலகாவி மக்களவை தொகுதியில் 54.73 சதவீதமும், பசவகல்யாண் தொகுதியில் 59.57 சதவீதமும், மஸ்கியில் 70.48 சதவீதமும் வாக்குகள் பதிவாயின. பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்கள் அந்த தொகுதிகளில் உள்ள ஓட்டு எண்ணிக்கை மையங்களில் வைக்கப்பட்டுள்ளது. 

கடந்த 13 நாட்களாக துப்பாக்கி ஏந்திய போலீசார் 24 மணி நேரமும், ஓட்டு எண்ணிக்கை மையம் முன்பு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

கொரோனா பரிசோதனை

இந்த நிலையில் இந்த 3 தொகுதிகளின் ஓட்டு எண்ணிக்கை நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. காலை 8 மணிக்கு தொடங்கும் ஓட்டு எண்ணிக்கை மதியம் வரை நடக்கிறது. மதியம் 1 மணிக்குள் எந்த கட்சி வெற்றி பெறும் என்ற விவரம் தெரியவரும். 

ஓட்டுப்பதிவில் பங்கேற்கும் கட்சிகளின் முகவர்கள், கட்டாயம் கொரோனா பரிசோதனை செய்து, நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும். கொரோனா பாதிப்பு இல்லாதவர்களுக்கு மட்டுமே வாக்கு எண்ணும் மையங்களில் அனுமதி அளிக்க தேர்தல் ஆணைய அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

நம்பிக்கை இல்லை

மேலும் வாக்கு எண்ணும் மையங்களில் பத்திரிகையாளர்களுக்கு விசாலமான அறையை ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஓட்டு எண்ணிக்கையை முன்னிட்டு வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போட முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் அங்கு கட்சியினர் கூட்டமாக கூடுவதை தடுக்கவும் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்த இடைத்தேர்தலை பொறுத்த வரையில் எந்த கட்சி வெற்றி பெற்றாலும் தற்போது நடைபெறும் பா.ஜனதா ஆட்சிக்கு எந்த ஆபத்தும் கிடையாது. ஆனால் ஆளுங்கட்சி தோல்வியை தழுவினால் அது இந்த அரசு மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை என்ற தகவலை வெளிப்படுத்தி இருப்பதாக எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்யும்.

நெருக்கடி கொடுக்க... 

அதனால் இந்த இடைத்தேர்தலில் வெற்றி பெற பா.ஜனதா தீவிர பிரசாரம் மேற்கொண்டது. ஆளுங்கட்சியை தோற்கடித்து நெருக்கடி கொடுக்க காங்கிரஸ் தலைவர்களும் களத்தில் இறங்கி தேர்தல் பணிகளை ஆற்றினர். வெற்றி யாருக்கு என்பது நாளை தெரிந்துவிடும்.

Next Story