பயிற்சி டாக்டர்கள் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட வேண்டும்; சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் வேண்டுகோள்
பயிற்சி டாக்டர்கள் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட வேண்டும் என்று சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் வேண்டுகோள் விடுத்து உள்ளார்.
பெங்களூரு: பயிற்சி டாக்டர்கள் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட வேண்டும் என்று சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் வேண்டுகோள் விடுத்து உள்ளார்.
சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
மக்களிடம் விழிப்புணர்வு
பீதர் ஆஸ்பத்திரியில் நான் இன்று (நேற்று) நேரில் ஆய்வு செய்தேன். அங்கு டாக்டர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களை சரியான முறையில் பயன்படுத்தாமல் இருப்பது தெரியவந்தது. அந்த ஆஸ்பத்திரி இயக்குனர் பொறுப்பற்ற முறையில் செயலாற்றியுள்ளார்.
கொரோனா குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது அவசியம். ஊரடங்கு கட்டுப்பாடுகளை பொதுமக்கள் தீவிரமாக பின்பற்ற வேண்டும். கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க தேவையான டாக்டர்கள் மற்றும் பணியாளர்கள் உள்ளனர். பணியாளர்கள் ஒற்றுமையுடன் பணியாற்ற வேண்டும்.
உடல் கவச உடைகள்
டாக்டர்கள், பணியாளர்கள் போதுமான அளவிற்கு இருக்கும்போதிலும், அவர்களை முழுமையாக பயன்படுத்தாமல் இருந்தது சரியல்ல. இது போர் காலம்.
கொரோனாவுக்கு எதிராக நாடே போராடிக் கொண்டிருக்கிறது. இத்தகைய நேரத்தில் எம்.பி.பி.எஸ். பயிற்சி டாக்டர்கள், முதுநிலை படிக்கும் டாக்டர்கள் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட வேண்டும். தொலைதூர மருத்துவ ஆலோசனைகள் வழங்கும் பணியில் ஈடுபட வேண்டும்.
வார்டுகளில் பணியாற்றும் டாக்டர்கள், பணியாளர்களுக்கு உடல் கவச உடைகள் வழங்காதது சரியல்ல. தரமான கவச உடைகளை அரசு அனுப்பியுள்ளது. ஆனாலும் அதை பயன்படுத்தாமல் இருப்பது சரியல்ல என்று அதிகாரிகளை கண்டித்துள்ளேன். இதுகுறித்து விசாரணை நடத்தி அறிக்கை வழங்கும்படி உயர் அதிகாரிக்கு உத்தரவிட்டுள்ளேன்.
சி.டி.ஸ்கேன் கருவி
பீதர் மருத்துவமனையில் உள்ள சி.டி.ஸ்கேன் செயல்படாமல் உள்ளது. இன்று (நேற்று) மாலைக்குள் அந்த ஸ்கேன் கருவியை செயல்பட வைக்க வேண்டும். மேலும் ஒரு சி.டி.ஸ்கேன் கருவியை வாங்கவும் உத்தரவிட்டுள்ளேன்.
இவ்வாறு சுதாகர் கூறினார்.
இந்த பேட்டியின்போது கால்நடைத்துறை மந்திரி பிரபு சவான் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story