பல்லாரி மாநகராட்சி உள்பட 10 நகர உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் வெற்றி
பல்லாரி மாநகராட்சி உள்பட 10 நகர உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் அபார வெற்றி பெற்றது. ஆளும் பா.ஜனதாவுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டு உள்ளது.
பெங்களூரு: பல்லாரி மாநகராட்சி உள்பட 10 நகர உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் அபார வெற்றி பெற்றது. ஆளும் பா.ஜனதாவுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டு உள்ளது.
நகர உள்ளாட்சி தேர்தல்
பல்லாரி மாநகராட்சி, ராமநகர் நகராட்சி, விஜயபுரா புரசபை, சன்னபட்டணா நகராட்சி, கடிபன்டே பட்டண பஞ்சாயத்து, பத்ராவதி நகராட்சி, தீர்த்தஹள்ளி பட்டண பஞ்சாயத்து, பேலூர் புரசபை, பீதர் நகராட்சி, மடிகேரி நகராட்சி ஆகிய நகர உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த 27-ந் தேதி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் வாக்காளர்கள் ஆர்வமாக வந்து வாக்களித்தனர்.
இதில் பதிவான வாக்குகள் அடங்கிய வாக்கு பெட்டிகளுக்கு சீல் வைக்கப்பட்டு ஓட்டு எண்ணும் மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் இந்த நகர உள்ளாட்சி தேர்தலில் பதிவான ஓட்டுகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
பல்லாரி மாநகராட்சி
39 வார்டுகளை கொண்ட பல்லாரி மாநகராட்சியில் காங்கிரஸ் 21 இடங்களில் வெற்றி பெற்று அந்த மாநகராட்சியை கைப்பற்றியுள்ளது. ஆளும் பா.ஜனதா வெறும் 13 வார்டுகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. சுயேச்சைகள் 5 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளனர்.
33 வார்டுகளை கொண்ட பீதர் நகராட்சியில் 15 வார்டுகளில் காங்கிரஸ் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்றுள்ளது. பா.ஜனதா 9 வார்டுகளிலும், ஜனதா தளம் (எஸ்) கட்சி 7 வார்டுகளிலும், ஆம் ஆத்மி கட்சி, ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி தலா ஒரு இடத்தில் வெற்றி பெற்றுள்ளது.
ராமநகர் நகராட்சி
31 வார்டுகளை கொண்ட ராமநகர் நகராட்சியில் 19 வார்டுகளில் காங்கிரஸ் வெற்றி பெற்று அந்த நகராட்சியை கைப்பற்றியுள்ளது. அந்த நகராட்சியில் பா.ஜனதா ஒரு வார்டில் கூட வெற்றி பெறவில்லை. அந்த பகுதியில் பலம் வாய்ந்த கட்சியாக இருக்கும் ஜனதா தளம் (எஸ்) 11 வார்டுகளிலும், சுயேச்சை ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளனர்.
31 வார்டுகளை கொண்ட சன்னபட்டணா நகராட்சியில் காங்கிரஸ், பா.ஜனதா தலா 7 வார்டுகளிலும், ஜனதா தளம் (எஸ்) கட்சி 16 வார்டுகளிலும், சுயேச்சை ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளன. அந்த நகராட்சியை ஜனதா தளம் (எஸ்) கட்சி வசப்படுத்தி உள்ளது.
மடிகேரி நகராட்சி
34 வார்டுகளை கொண்ட பத்ராவதி நகராட்சியில் 18 வார்டுகளில் காங்கிரஸ் வெற்றி பெற்று அந்த நகராட்சியை கைப்பற்றியுள்ளது. அங்கு பா.ஜனதா 4 வார்டுகளிலும், ஜனதா தளம் (எஸ்) 11 வார்டுகளிலும், சுயேச்சை ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளன.
23 வார்டுகளை கொண்ட மடிகேரி நகராட்சியில் பா.ஜனதா 16 இடங்களில் வெற்றி பெற்று அந்த நகராட்சியை கைப்பற்றியுள்ளது. காங்கிரஸ், ஜனதா தளம் (எஸ்) தலா ஒரு இடத்திலும், எஸ்.டி.பி.ஐ. கட்சி 5 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளன. 23 வார்டுகளை கொண்ட பேலூர் புரசபையில் காங்கிரஸ் 17 இடங்களில் வெற்றி பெற்று அந்த புரசபையை கைப்பற்றி இருக்கிறது. பா.ஜனதா ஒரு இடத்திலும், ஜனதாதளம் (எஸ்) 5 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளன.
தீர்த்தஹள்ளி பட்டண பஞ்சாயத்து
23 வார்டுகளை கொண்ட விஜயபுரா புரசபையில் ஜனதா தளம் (எஸ்) 13 வார்டுகளில் வெற்றி பெற்று அந்த புரசபையை கைப்பற்றியுள்ளது. காங்கிரஸ் 7 வார்டுகளிலும், பா.ஜனதா ஒரு இடத்திலும், சுயேச்சைகள் 2 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. 15 வார்டுகளை கொண்ட தீர்த்தஹள்ளி பட்டண பஞ்சாயத்தில் காங்கிரஸ் 9 வார்டுகளில் வெற்றி பெற்று அந்த பட்டண பஞ்சாயத்தை கைப்பற்றியுள்ளது. பா.ஜனதா 6 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளது.
11 வார்டுகளை கொண்ட கடிபன்டே பட்டண பஞ்சாயத்தில் காங்கிரஸ் 6 இடங்களில் வெற்றி பெற்று அந்த பட்டண பஞ்சாயத்தை கைப்பற்றி இருக்கிறது. ஜனதா தளம் (எஸ்) 2 இடங்களிலும், சுயேச்சைகள் 3 வார்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளன.
ஹள்ளிகேடபி புரசபையில் ஒரு இடத்திற்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. இரேகூர் பட்டண பஞ்சாயத்தில் காலியாக இருந்த ஒரு இடத்திற்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் சுயேச்சை ஒருவர் வெற்றி பெற்றுள்ளார்.
பா.ஜனதாவுக்கு பின்னடைவு
ஆகமொத்தம் இந்த தேர்தலில் முக்கியமாக பல்லாரி மாநகராட்சியை காங்கிரஸ் கைப்பற்றி இருப்பது ஆளும் பா.ஜனதாவுக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. மேலும், 5 நகராட்சிகளில் 3 நகராட்சியை காங்கிரஸ் தன்வசப்படுத்தி கொண்டுள்ளது.
ஜனதா தளம் (எஸ்), பா.ஜனதா கட்சிகள் தலா ஒரு நகராட்சியை பிடித்துள்ளன. 2 புரசபைகளில் காங்கிரஸ், ஜனதா தளம் (எஸ்) கட்சிகள் தலா ஒரு புரசபையை கைப்பற்றி உள்ளது. 2 பட்டண பஞ்சாயத்துகளையும் காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது. கர்நாடகத்தில் ஆளுங்கட்சியாக பா.ஜனதா இருந்தும், எதிர்க்கட்சியாக இருக்கும் காங்கிரஸ் அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இந்த நகர உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் பா.ஜனதாவுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளன.
121 வார்டுகளில் காங்கிரஸ்
மொத்தம் 265 வார்டுகளுக்கு நடைபெற்ற தேர்தலில் 121 வார்டுகளில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. ஆளும் பா.ஜனதா 57 வார்டுகளிலும், ஜனதா தளம் (எஸ்) 66 வார்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளன. எஸ்.டி.பி.ஐ. கட்சி 5 வார்டுகளிலும், ஆம் ஆத்மி கட்சி ஒரு இடத்திலும், ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி ஒரு இடத்திலும், 14 வார்டுகளில் சுயேச்சைகளும் வெற்றி பெற்றுள்ளன. இந்த நகர உள்ளாட்சி தேர்தலில் ஆளும் பா.ஜனதாவுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
Related Tags :
Next Story