கொரோனா பாதிப்பு இல்லை என்று பொதுமக்களுக்கு போலி சான்றிதழ்; 2 பேர் கைது


கொரோனா பாதிப்பு இல்லை என்று பொதுமக்களுக்கு போலி சான்றிதழ்; 2 பேர் கைது
x
தினத்தந்தி 1 May 2021 2:21 AM IST (Updated: 1 May 2021 2:21 AM IST)
t-max-icont-min-icon

பரிசோதனை செய்யாமல், கொரோனா பாதிப்பு இல்லை என்று பொதுமக்களுக்கு போலி சான்றிதழ் கொடுத்த 2 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

பெங்களூரு: பரிசோதனை செய்யாமல், கொரோனா பாதிப்பு இல்லை என்று பொதுமக்களுக்கு போலி சான்றிதழ் கொடுத்த 2 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். 

கொரோனா பரிசோதனை 

கர்நாடகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து உள்ளது. இதனை கட்டுப்படுத்த பொதுமக்கள் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று அரசும், சுகாதாரத்துறையினரும் கூறி வருகின்றனர். ஆனால் கொரோனா பரிசோதனை செய்து அதில் பாதிப்பு உறுதி என்று வந்தால் தங்களை தனிமைப்படுத்தி விடுவார்கள் என்ற பயத்தில் பொதுமக்கள் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள அஞ்சுகிறார்கள். 

இந்த நிலையில் கொரோனா பரிசோதனை செய்யாமல் பொதுமக்களுக்கு நெகடிவ் சான்றிதழ் கொடுத்த 2 பேர் பெங்களூருவில் கைது செய்யப்பட்டு உள்ளனர். அதுபற்றிய விவரம் வருமாறு:-

போலி சான்றிதழ் 

பெங்களூரு வர்த்தூர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட சர்ஜாபுரா சாலையில் 2 பேர் பொதுமக்களுக்கு போலி கொரோனா பரிசோதனை சான்றிதழ் கொடுப்பதாக, மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அங்கு சந்தேகம்படும்படியாக சுற்றித்திரிந்த 2 பேரை போலீசார் பிடித்து விசாரித்தனர். 

அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் அவர்களிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் பெங்களூரு புறநகர் மாவட்டம் சோழதேவனஹள்ளியை சேர்ந்த முகேஷ்சிங்(வயது 25), ஒசஹள்ளியை சேர்ந்த நாகராஜ் என்கிற ஓம்சக்தி(39) என்பது தெரியவந்தது. 

இவர்கள் 2 பேரும் கொரோனா பரிசோதனை செய்யாமல் ஆதார் கார்டுகளை வாங்கி கொண்டு பொதுமக்களுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்று போலியாக சான்றிதழ் வழங்கியதும் தெரிந்தது. 

இதற்காக அவர்கள் பொதுமக்களிடம் இருந்து பணம் வசூலித்து உள்ளனர். கைதானவர்களிடம் இருந்து 100-க்கும் மேற்பட்ட போலி கொரோனா சான்றிதழ்கள், 2 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கைதான 2 பேர் மீதும் வர்த்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். 

Next Story