இன்றும், நாளையும் மீன்-இறைச்சி கடைகளை திறந்தால் கடும் நடவடிக்கை; மாநகராட்சி ஆணையாளர் எச்சரிக்கை


இன்றும், நாளையும் மீன்-இறைச்சி கடைகளை திறந்தால் கடும் நடவடிக்கை; மாநகராட்சி ஆணையாளர் எச்சரிக்கை
x
தினத்தந்தி 30 April 2021 10:32 PM GMT (Updated: 30 April 2021 10:32 PM GMT)

மீன் மற்றும் இறைச்சி கடைகளை இன்றும் (சனிக்கிழமை), நாளையும் (ஞாயிற்றுக்கிழமை) திறந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஈரோடு
மீன் மற்றும் இறைச்சி கடைகளை இன்றும் (சனிக்கிழமை), நாளையும் (ஞாயிற்றுக்கிழமை) திறந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மீன்-இறைச்சி கடைகள்
தமிழகத்தில் கொரோனா வைரஸ் மிகவும் வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமை தோறும் முழுநேர ஊரடங்கும் பிறப்பிக்கப்பட்டு அமலில் உள்ளது.
ஞாயிற்றுக்கிழமை முழுநேர ஊரடங்கு என்பதால் சனிக்கிழமை அன்று ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து மீன் மற்றும் இறைச்சி கடைகளில் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. இதே நிலைதான் தமிழகம் முழுவதும் நீடிக்கிறது. பெரும்பாலான பொதுமக்கள் முக கவசம் அணிந்து வந்தாலும், சமூக இடைவெளி கேள்விக்குறியாகி உள்ளது. இதன் காரணமாக சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மீன், இறைச்சி கடைகள் செயல்பட தமிழக அரசு தடை விதித்து உள்ளது. இதன்காரணமாக ஈரோடு மாநகர் பகுதியில் நேற்று அனைத்து இறைச்சி மற்றும் மீன் கடைகளில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
கடும் நடவடிக்கை
இதுகுறித்து ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் கூறியதாவது:-
ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மீன், இறைச்சி கடைகள் செயல்பட தடை விதிக்கப்பட்டு உள்ளது. அதனால் ஈரோடு மாவட்டத்தில் நாளையும் (அதாவது இன்று), நாளை மறுநாளும் (அதாவது நாளை) அனைத்து வகையான இறைச்சி கடைகளும் இயங்க அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது.
எனவே தடை உத்தரவை மீறி எங்காவது இறைச்சி கடைகள் செயல்படுவது தெரிந்தால் சம்பந்தப்பட்டவர்கள்  மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக மாநகர் பகுதியில் அரசு அலுவலர்கள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story