ஈரோடு மாவட்டத்துக்கு கூடுதலாக 8,500 கொரோனா தடுப்பூசி- கலெக்டர் கதிரவன் தகவல்


ஈரோடு மாவட்டத்துக்கு கூடுதலாக 8,500 கொரோனா தடுப்பூசி- கலெக்டர் கதிரவன் தகவல்
x
தினத்தந்தி 30 April 2021 10:34 PM GMT (Updated: 30 April 2021 10:34 PM GMT)

ஈரோடு மாவட்டத்துக்கு கூடுதலாக 8 ஆயிரத்து 500 கொரோனா தடுப்பூசி வரப்பெற்று உள்ளதாக கலெக்டர் கதிரவன் தெரிவித்து உள்ளார்.

ஈரோடு
ஈரோடு மாவட்டத்துக்கு கூடுதலாக 8 ஆயிரத்து 500 கொரோனா தடுப்பூசி வரப்பெற்று உள்ளதாக கலெக்டர் கதிரவன் தெரிவித்து உள்ளார்.
கொரோனா தடுப்பூசி
ஈரோடு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்து இருப்பதாவது:-
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் போர்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது மாவட்டத்தில் 1,996 பேர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். இதுவரை மாவட்டத்தில் 5 லட்சத்து 12 ஆயிரத்து 399 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளன. நேற்று முன்தினம் வரை 1 லட்சத்து 31 ஆயிரத்து 819 பேர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர்.
கூடுதல் தடுப்பூசி
ஈரோடு மாவட்டத்திற்கு கூடுதலாக 8 ஆயிரத்து 500 கொரோனா தடுப்பூசி வரப்பெற்று உள்ளது. எனவே, கொரோனா வைரஸ் தடுப்பூசி போதிய அளவில் இருப்பில் உள்ளது. பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, ஈரோடு அரசு மருத்துவமனை, அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் கொரோனா வைரஸ் தடுப்பூசி இலவசமாக வழங்கப்படுகிறது.
பொதுமக்கள் சளி, காய்ச்சல் உள்ளிட்ட நோய்க்கான அறிகுறி இருந்தால் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனைகளை அணுகி டாக்டரின் ஆலோசனைகளை பெற வேண்டும். பொது இடங்களுக்கு வரும் போது கட்டாயம் முக கவசம் அணிந்து வரவேண்டும். கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக, விவரங்கள் மற்றும் சந்தேகங்களுக்கு 24 மணிநேரமும் இயங்கும் ஈரோடு மாவட்ட அவசரகால கட்டுப்பாட்டு மையத்துக்கு 0424-1077, 0424-2260211 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் மாவட்ட கலெக்டர் கதிரவன் தெரிவித்துள்ளார்.

Next Story