ஆண்டிப்பட்டியில் கோழி இறைச்சி கழிவுகள் கலந்த குடிநீர் வினியோகம் பொதுமக்கள் அதிர்ச்சி
ஆண்டிப்பட்டியில் கோழி இறைச்சி கழிவுகள் கலந்த குடிநீர் வினியோகம் செய்யப்பட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
ஆண்டிப்பட்டி:
ஆண்டிப்பட்டி பேரூராட்சியின் குடிநீர் தேவைக்காக வைகை அணை அருகில் உள்ள ஜம்புலிபுத்தூரில் கூட்டுக்குடிநீர் திட்டம் அமைக்கப்பட்டு, 18-வார்டுகளுக்கும் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. வைகை அணையில் போதுமான அளவு தண்ணீர் இருப்பு இருக்கும் நிலையிலும், 10 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே சுழற்சி அடிப்படையில் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஆண்டிப்பட்டி 11-வது வார்டு பூக்காரத்தெரு மற்றும் 12-வது வார்டு பகுதிகளில் கடந்த 2 நாட்களாக வினியோகம் செய்யப்பட்ட தண்ணீரில் கோழி இறைச்சி கழிவுகள் மிதந்து வந்தது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். எனினும் குடிக்க தண்ணீர் தேவை என்பதால் குழாயில் துணியை வைத்து வடிகட்டி மக்கள் தண்ணீர் பிடித்து வருகின்றனர்.
இதனிடையே குடிநீரில் இறைச்சி கழிவுகள் கலந்தது எப்படி என்று மக்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். சமூக விரோதிகள் யாரேனும் மேல்நிலை நீர்தேக்கதொட்டியில் ஏறி, திட்டமிட்டு கோழி இறைச்சி கழிவுகளை கொட்டினார்களா? என்று தெரியவில்லை. ஏற்கனவே கொரோனா பாதிப்பால் மக்கள் அவதி அடைந்து வரும் நிலையில், தற்போது குடிநீரில் இறைச்சி கழிவுகள் கலந்து வருவதால் மேலும் தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. இதுகுறித்து பேரூராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story