தேனி மாவட்டத்தில் 4 தொகுதிகளுக்கும் பலத்த பாதுகாப்புடன் இன்று வாக்கு எண்ணிக்கை கொரோனா பரவலை தடுக்க கடும் கட்டுப்பாடுகள்


தேனி மாவட்டத்தில் 4 தொகுதிகளுக்கும் பலத்த பாதுகாப்புடன் இன்று வாக்கு எண்ணிக்கை கொரோனா பரவலை தடுக்க கடும் கட்டுப்பாடுகள்
x
தினத்தந்தி 1 May 2021 11:51 AM GMT (Updated: 1 May 2021 12:00 PM GMT)

தேனி மாவட்டத்தில் 4 சட்டமன்ற தொகுதிகளுக்கும் பலத்த பாதுகாப்புடன் இன்று வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. கொரோனா பரவலை தடுக்க கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

தேனி:
தேனி மாவட்டத்தில் ஆண்டிப்பட்டி, பெரியகுளம் (தனி), போடி, கம்பம் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளில் மொத்தம் 74 பேர் போட்டியிட்டனர். இந்த தொகுதிகளில் தேர்தல் கடந்த மாதம் 6-ந்தேதி நடந்தது.
பின்னர் வாக்குப்பதிவு எந்திரங்கள் தேனி அருகே கொடுவிலார்பட்டியில் தனியார் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்ட வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள பாதுகாப்பு அறைகளில் வைத்து ‘சீல்’ வைக்கப்பட்டன. இந்த மையத்துக்கு 3 அடுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
இன்று (ஞாயிற்றுக்கிழமை) வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. இதற்காக வாக்கு எண்ணும் மையத்தில் 1,400-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வரும் சூழலில் வாக்கு எண்ணிக்கை நடப்பதால் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் அலுவலர்கள், வேட்பாளர்கள், வேட்பாளர்களின் முகவர்கள் ஆகியோர் முக கவசம், முகவுறை (பேஸ் ஷீல்டு), கையுறை கட்டாயம் அணிந்து இருக்க வேண்டும். கொரோனா பரிசோதனை செய்து கொரோனா இல்லை என்ற சான்றிதழ் அல்லது 2 தவணை தடுப்பூசி செலுத்தியதற்கான சான்று வைத்து இருப்பவர்கள் மட்டுமே உடல் வெப்பநிலை பரிசோதனைக்கு பிறகு வாக்கு எண்ணும் மையத்துக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.
முன்னேற்பாடு பணிகள்
வாக்கு எண்ணும் அறையில் தடுப்பு கம்புகள் கட்டப்பட்டுள்ளன. ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் 14 மேஜைகள் அமைக்கப்பட்டு ஒவ்வொரு மேஜைக்கும் தனித்தனி சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும், நுழைவு வாயிலில் இருந்து வாக்கு எண்ணும் அறைக்கு செல்வதற்கு தனித்தனி வழித்தட வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. இதற்காக அங்கு கம்புகளால் அடைத்து பாதைகள் உருவாக்கப்பட்டு உள்ளன.
வாக்கு எண்ணும் மையம் அமைந்துள்ள கல்லூரி வளாகத்துக்கு வெளியே 50 மீட்டர் தூரத்திலும், 100 மீட்டர் தூரத்திலும் சாலையில் நேற்று தடுப்புகள் அமைக்கப்பட்டன. வாகனங்கள் இந்த தடுப்புகளுக்கு முன்பே தடுத்து நிறுத்தப்படும். வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் அங்கிருந்து உடல் வெப்ப நிலை பரிசோதனை மற்றும் அடையாள ஆவணங்கள் சரிபார்ப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்ட பின்னரே மையத்துக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.
இதற்காக அங்கு சாலையில் சமூக இடைவெளியுடன் காத்திருக்க கோடுகள் வரையும் பணியும், 50 மீட்டர், 100 மீட்டர் என அடையாளப்படுத்தும் பணியிலும் போலீசார் ஈடுபட்டனர். வாக்கு எண்ணும் மையத்தில் முன்னேற்பாடு பணிகளை மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி மற்றும் தேர்தல் பொது பார்வையாளர்கள் நேற்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.


Next Story