முதியவர் உடலை மயானத்தில் புதைக்க கிராம மக்கள் எதிர்ப்பு
வேடசந்தூர் அருகே முதியவர் உடலை மயானத்தில் புதைக்க கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர்.
வேடசந்தூர்:
வேடசந்தூர் அருகே உள்ள கோவிலூர் மேற்கு தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 71). இவர், உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்தார். இதனையடுத்து அவருடைய உடலை புதைப்பதற்காக, அதே பகுதியில் உள்ள மின்நகர் மயானத்துக்கு நேற்று உறவினர்கள் எடுத்து சென்றனர்.
அப்போது அங்கு வந்த மற்றொரு தரப்பினர், மயனத்தின் அருகே வீடுகள் இருக்கிறது என்றும், இங்கு உடலை அடக்கம் செய்யக்கூடாது என்றும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அவர்களுக்கிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனால் ஆத்திரம் அடைந்த ஆறுமுகத்தின் உறவினர்கள், கோவிலூரில் திண்டுக்கல்-கரூர் சாலையில் உடலை வைத்து திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பதற்றமும், பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த எரியோடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கலையரசன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பின்னர் இருதரப்பினரிடம் பேச்சுவார்த்தை நடத்தி போலீசார் சமரசம் செய்தனர்.
ஊர் முக்கியஸ்தர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி முடிவு செய்யப்படும் என்று எதிர்ப்பு தெரிவித்தவர்களிடம் என்று கூறினர். இதேபோல் வழக்கப்படி உடலை புதைத்து கொள்ளுமாறு போலீசார் ஆறுமுகத்தின் உறவினர்களிடம் போலீசார் தெரிவித்தனர்.
இதனையடுத்து ஆறுமுகத்தின் உடல், அங்குள்ள மயானத்தில் புதைக்கப்பட்டது. மறியல் காரணமாக திண்டுக்கல்-கரூர் சாலையில் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
-------
Related Tags :
Next Story