சட்டமன்ற தேர்தல் முடிவுகள் அறிவிக்கும் முன்பே அ.தி.மு.க. வெற்றி பெறும் என கல்வெட்டு வைத்த போலீஸ்காரர் சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது


சட்டமன்ற தேர்தல் முடிவுகள் அறிவிக்கும் முன்பே அ.தி.மு.க. வெற்றி பெறும் என கல்வெட்டு வைத்த போலீஸ்காரர் சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது
x
தினத்தந்தி 1 May 2021 3:05 PM GMT (Updated: 1 May 2021 3:05 PM GMT)

சட்டமன்ற தேர்தல் முடிவுகள் அறிவிக்கும் முன்பே அ.தி.மு.க. வெற்றி பெறும் என போலீஸ்காரர் வைத்து கல்வெட்டு சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.

உத்தமபாளையம்:
தேனி மாவட்டம் குச்சனூரை சேர்ந்தவர் வேல்முருகன் (வயது 49). போலீஸ்காரராக பணியாற்றிய இவர் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது அலகு குத்தி பால்குடம் எடுத்தார். கடந்த 2017-ம் ஆண்டு சசிகலாவை முதல்-அமைச்சராக பதவியேற்க அழைக்க வேண்டும் என்று அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் கவர்னருக்கு கடிதம் கொடுத்தனர். அப்போது முதல்- அமைச்சராக சசிகலா பதவி ஏற்க கூடாது என்றும், இதை கண்டித்து ஜெயலலிதா சமாதியில் உண்ணாவிரதம் இருப்பேன் என்றும் வேல்முருகன் அறிவித்தார். இதைத்தொடர்ந்து பல்வேறு காரணங்களால் வேல்முருகன் பணிநீக்கம் செய்யப்பட்டார். 
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் முடிவுகள் அறிவிக்கப்படும் முன்பு தேனி தொகுதி எம்.பி. ஆக ரவீந்திரநாத் பதவி ஏற்பார் என்று கல்வெட்டு வைத்தார். அதன்படி அவர் வெற்றி பெற்றார். 
தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று(ஞாயிற்றுக்கிழமை) வெளியாக உள்ளது. இந்தநிலையில் தேர்தல் முடிவுகளை அறிவிக்கும் முன்பே குச்சனூரில், வேல்முருகன் பராமரித்து வரும் காசி அன்னபூரணி கோவிலில் ஒரு கல்வெட்டு வைத்துள்ளார். அந்த கல்வெட்டில் அ.தி.மு.க. 3-வது முறையாக வெற்றி பெற்று முதல்-அமைச்சராக எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சராக ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் வருகிற 9-ந்தேதி பதவி ஏற்பார்கள் என்று பொறிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த கல்வெட்டு சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.


Next Story