வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு பணியில் 800 போலீசார்


வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு பணியில் 800 போலீசார்
x
தினத்தந்தி 1 May 2021 9:25 PM IST (Updated: 1 May 2021 9:25 PM IST)
t-max-icont-min-icon

நாகையில், இன்று(ஞாயிற்றுக்கிழமை) சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. வாக்கு எண்ணும் மையத்தில் 800 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். மேலும் சாலைகளில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

நாகப்பட்டினம்:
நாகையில், இன்று(ஞாயிற்றுக்கிழமை) சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. வாக்கு எண்ணும் மையத்தில் 800 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். மேலும் சாலைகளில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
சட்டசபை தேர்தல்
நாகை மாவட்டத்தில் நாகை, கீழ்வேளூர், வேதாரண்யம் ஆகிய 3 சட்டசபை தொகுதிகள் உள்ளன. கடந்த மாதம் 6-ந் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற்றது.   நாகை தொகுதியில் 13 வேட்பாளர்களும், வேதாரண்யம் தொகுதியில் 12 வேட்பாளர்களும், கீழ்வேளூர் தொகுதியில் 10 வேட்பாளர்களும் என 3 சட்டசபை தொகுதிகளிலும் 35 பேர் போட்டியிட்டனர்.
 வாக்குப்பதிவு முடிந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் நாகை இ.ஜி.எஸ். பிள்ளை கல்லூரியில் ஒரு அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.  இந்த மையத்துக்கு 24 மணி நேரமும் 3 அடுக்கு போலீசார் துப்பாக்கி ஏந்தி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். 
வாக்கு எண்ணிக்கை
மேலும் கண்காணிப்பு கேமரா மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வந்தது. வாக்கு எண்ணிக்கைக்கு தகுந்தாற்போல் மேஜைகள் அமைத்தல், தடுப்பு கட்டைகள் அமைத்தல், வேட்பாளர்கள் மற்றும் முகவர்களுக்கான இடங்களை தேர்வு செய்வது உள்ளிட்ட பணிகள் நடந்து வந்தன.
 இந்த நிலையில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணிக்கு வாக்கு எண்ணும் பணி தொடங்குகிறது. இதனால் வாக்கு எண்ணும் மையம் அமைந்துள்ள நாகை கிழக்கு கடற்கரை சாலை, நாகை-நாகூர் தேசிய நெடுஞ்சாலை, தெத்தி சாலை, ஆண்ட்ரூ சிட்டி சாலை என அனைத்து சாலைகளிலும் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த பகுதியில் வசிப்பவர்கள் மட்டும் தங்களது அடையாள ஆவணத்தை காண்பித்து விட்டு செல்ல போலீசார் அனுமதி அளித்துள்ளனர். மற்றவர்கள் யாரும் இந்த சாலையில் செல்ல அனுமதி இல்லை.
800 போலீசார் 
 அதேபோல் கொரோனா தொற்று இல்லை என சான்றிதழ் உள்ள முகவர்கள் மற்றும் வேட்பாளர்கள் மட்டுமே வாக்கு எண்ணும் மையத்திற்குள் செல்ல அனுமதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணும் மையத்தை சுற்றி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம் பிரகாஷ் மீனா தலைமையில் 800 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். குறிப்பாக வாக்கு எண்ணும் மையத்தின் உள்ளே 4 துணை போலீஸ் சூப்பிரண்டுகள், 10 இன்ஸ்பெக்டர்கள், 25 சப்- இன்ஸ்பெக்டர்கள் உள்பட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். 
 இதை தவிர்த்து வாக்கு எண்ணும் மையத்தின் வெளியே 1 துணை போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் 10-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர். வாக்கு எண்ணும் மையத்தின் உள்ளே கொரோனா பரிசோதனை செய்து கொண்ட 300 முகவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். வாக்கு எண்ணும் பணியில் 300 அலுவலர்கள் ஈடுபட உள்ளனர். 3 தேர்தல் நடத்தும் அலுவலர், 6 உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், தேர்தல் பொது பார்வையாளர் உள்ளிட்டோர் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட உள்ளனர்.
வெப்பநிலை பரிசோதனை
 இதனிடையே மாவட்ட கலெக்டர் பிரவீன் நாயர், போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ் மீனா ஆகியோர் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபடுகின்றனர். வாக்கு எண்ணும் மையத்தில் உள்ளே செல்லும் போது வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டு, அதன் பின்னரே அனுமதிக்கப்படுவார்கள்.
நாகை  தொகுதியில்  பதிவான வாக்குகள் 19 சுற்றுகளாகவும், கீழ்வேளூர்  தொகுதியில் பதிவான வாக்குகள் 18 சுற்றுகளாகவும், வேதாரண்யம் தொகுதியில் பதிவான வாக்குகள் 20 சுற்றுகளாகவும் எண்ணப்படுகின்றனர்.

Next Story