அத்தியாவசிய பொருட்கள் வாங்க அலைமோதிய மக்கள்
திண்டுக்கல்லில், அத்தியாவசிய பொருட்கள் வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது.
திண்டுக்கல்:
தமிழகத்தில் கொரோனா பரவலை தடுப்பதற்கு இரவு நேர ஊடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழுஊரடங்கு அமலில் இருக்கிறது. அதன்படி இன்று (ஞாயிற்றுக்கிழமை) முழுஊரடங்கு ஆகும்.
பொதுவாக ஞாயிற்றுக்கிழமைகளில் மக்கள் ஒரு வாரத்துக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்குவது வழக்கம். மேலும் மாதத்தின் முதல்வாரம் என்பதால் மாத சம்பளம் வாங்குபவர்கள் வீட்டுக்கு தேவையான பொருட்களை மொத்தமாக வாங்குவார்கள்.
ஆனால், ஊரடங்கு கடைபிடிக்கப்படுவதால் கடைகள் அனைத்தும் மூடப்படும். எனவே, மக்கள் தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கு ஆர்வம் காட்டினர்.
இதையொட்டி திண்டுக்கல் நாகல்நகர் சந்தைரோடு, மெயின்ரோடு, கடைவீதி, மேற்குரதவீதி ஆகிய பகுதிகளில் மளிகை, அரிசி கடைகளில் மக்கள் குவிந்தனர். வீட்டுக்கு தேவையான பொருட்களை மொத்தமாக வாங்கி சென்றனர்.
இதுதவிர காந்தி மார்க்கெட், நாகல்நகர் சந்தை, அரசமரதெரு, கிழக்கு ரதவீதி உள்பட தினசரி காய்கறி சந்தைகளில் காய்கறிகள் வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது. கொரோனா பரவல் அதிகரிப்பதால் ஊரடங்கு அச்சத்தில் பெரும்பாலான மக்கள் ஒரு வாரத்துக்கு தேவையான காய்கறிகளை வாங்கியது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக திண்டுக்கல் நகரில் முக்கிய சாலைகளில் வாகன நெரிசல் ஏற்பட்டது.
Related Tags :
Next Story