கொரோனா மருந்து தட்டுப்பாடு 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடவில்லை


கொரோனா மருந்து தட்டுப்பாடு 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடவில்லை
x
தினத்தந்தி 1 May 2021 9:39 PM IST (Updated: 1 May 2021 9:39 PM IST)
t-max-icont-min-icon

கொரோனா மருந்து தட்டுப்பாடு காரணமாக கடலூர் மாவட்டத்தில் நேற்று 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடவில்லை.

கடலூர், 

தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தினம் தினம் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. இந்த வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முதற்கட்டமாக கடந்த ஜனவரி மாதம் 16-ந் தேதி முதல் முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. அதனை தொடர்ந்து 2-ம் கட்டமாக 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் கடந்த மாதம் முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் 3-வது கட்டமாக 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் திட்டம் நேற்று முதல் தொடங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. மேலும் அதற்கு தேவையான தடுப்பூசிகளை, தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகம் மூலமாக கொள்முதல் செய்து வழங்கவும் அரசு உத்தரவிட்டது.

முன்னேற்பாடு

அதன்படி கடலூர் மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கு தேவையான முன்னேற்பாடு நடவடிக்கைகளை சுகாதாரத்துறையினர் தீவிரமாக மேற்கொண்டனர். இதற்காக ஏற்கனவே தடுப்பூசி போடப்பட்டு வரும் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், தனியார் மருத்துவமனைகள் மற்றும் தடுப்பூசி போடுவதற்காக அமைக்கப்பட்டிருந்த மையங்களிலேயே 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி செலுத்த முடிவு செய்திருந்தனர்.

ஆனால் கடலூர் மாவட்டத்திற்கு தேவையான தடுப்பூசி மருந்துகள், போதுமான அளவில் வரவில்லை. இதனால் கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டது. இதற்கிடையே தடுப்பூசி செலுத்திக்கொள்வதற்காக முன்பதிவு செய்த 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் பலரும் நேற்று காலை மாவட்டத்தில் உள்ள தடுப்பூசி போடக்கூடிய மையங்களுக்கு சென்றனர்.

ஏமாற்றம்

ஆனால் அங்கு மருந்து தட்டுப்பாடு காரணமாக தடுப்பூசியை செலுத்திக்கொள்ள முடியாமல் ஏமாற்றத்துடன் சென்றனர். இதேபோல் கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கும் நேற்று காலை 9 மணி அளவில் தடுப்பூசி போட்டுக்கொள்வதற்காக நூற்றுக்கும் மேற்பட்டோர் திரண்டு வந்தனர்.
அப்போது அங்கு கொரோனா மருந்து தட்டுப்பாடு காரணமாக 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்படவில்லை என ஊழியர்கள் தெரிவித்தனர். இதனால் தடுப்பூசி போட்டுக் கொள்ள ஆர்வமாக சென்ற 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

தட்டுப்பாடு

இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், கடலூர் மாவட்டத்தில் தடுப்பூசி மருந்து தட்டுப்பாடு காரணமாக 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு நேற்று தடுப்பூசி செலுத்த முடியவில்லை. இதுபற்றி மாநில சுகாதாரத்துறை தலைமையகத்திற்கு தகவல் அனுப்பி உள்ளோம். அதனால் இனி வரும் நாட்களில் கூடுதல் தடுப்பூசி மருந்துகளை பெற்ற பிறகே, 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு செலுத்தப்படும். அதற்கு இன்னும் ஓரிரு நாட்கள் ஆகும் என்றார்.

Next Story