கடலூர் மாவட்டத்தில் ஒரே நாளில் ரூ.9 கோடிக்கு மது விற்பனை


கடலூர் மாவட்டத்தில் ஒரே நாளில் ரூ.9 கோடிக்கு மது விற்பனை
x
தினத்தந்தி 1 May 2021 4:18 PM GMT (Updated: 1 May 2021 4:18 PM GMT)

2 நாட்கள் தொடர் விடுமுறை எதிரொலியினால் கடலூர் மாவட்டத்தில் ஒரே நாளில் ரூ.9 கோடிக்கு மது விற்பனையாகி உள்ளது.

கடலூர் முதுநகர், 

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. புதுச்சேரியில் பல்வேறு தளர்வுகளுடனான ஊரடங்கை வருகிற 3-ந்தேதி வரை நீட்டித்துள்ளது. இதில் கடந்த 26-ந்தேதி இரவு முதல் 3-ந்தேதி வரை மதுக்கடைகள், பார்கள், சாராயம் மற்றும் கள்ளுக்கடைகள் மூடப்படும் என்று அறிவித்துள்ளது. இதனால் புதுச்சேரி மாநில மதுபிரியர்கள், மாநில எல்லையான கடலூருக்கு படையெடுக்க தொடங்கியுள்ளனர். இதுதவிர தமிழகத்திலும், ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு, பிற நாட்களில் இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளது. 

அலைமோதினர்

இந்த நிலையில் நேற்று மே தினம் என்பதால் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) முழு ஊரடங்கு என்பதால் டாஸ்மாக் கடைகள் திறந்திருக்காது. இவ்வாறு சனி, ஞாயிறு என 2 நாட்கள் தொடர்ந்து டாஸ்மாக் கடைகள் இயங்காது என்பதால் நேற்று முன்தினம் மதுபானம் வாங்க டாஸ்மாக் கடைகளில் மதுப்பிரியர்களின் கூட்டம் அலைமோதியது. ஒரு சில கடைகளில் மதுபிரியர்கள் முண்டியடித்துக்கொண்டு 2, 3 நாட்களுக்கு தேவையான மதுபானங்களை பெட்டி, பெட்டியாக போட்டி போட்டு வாங்கிச்சென்றதை காண முடிந்தது. இதேபோல் புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த மதுபிரியர்களும் தங்களுக்கு பிடித்தமான மதுபாட்டில்களை வாங்கிச்சென்றனர். 

வரலாற்று சாதனை

கடலூர் மாவட்டத்தில் வரலாற்று சாதனயைாக நேற்று முன்தினம் ஒரே நாளில் ரூ.9 கோடியே 78 லட்சத்துக்கு மது விற்பனையாகி உள்ளது. வழக்கமாக சாதாரண நாட்களில் ரூ.3 கோடி வரையில் தான் மதுவிற்பனை நடைபெறும், பொங்கல், தீபாவளி, புத்தாண்டு போன்ற பண்டிகை நேரத்தில் கூட இந்தளவுக்கு விற்பனை நடைபெறாது. இது ஒரு வரலாற்று சாதனையாக உள்ளது என டாஸ்மாக் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Next Story