திருக்கோவிலூர் பகுதியில் கட்டுப்பாட்டை மீறி வீதியில் உலா வரும் கொரோனா நோயாளிகள்


திருக்கோவிலூர் பகுதியில் கட்டுப்பாட்டை மீறி வீதியில் உலா வரும் கொரோனா நோயாளிகள்
x
தினத்தந்தி 1 May 2021 10:33 PM IST (Updated: 1 May 2021 10:33 PM IST)
t-max-icont-min-icon

திருக்கோவிலூர் பகுதியில் கட்டுப்பாட்டை மீறி வீதியில் உலா வரும் கொரோனா நோயாளிகள் தொற்று பரவும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் அச்சம்

திருக்கோவிலூர்

திருக்கோவிலூர் பேரூராட்சி பகுதியில் கடந்த 10 நாட்களாக கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், இறந்தவர்கள் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. 

இந்த நிலையில் திருக்கோவிலூர் என்.ஜி.ஓ.நகர் ஆஞ்சநேயர் கோவில் பகுதியில் ஒரே நாளில் 22 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதுபற்றிய தகவல் அறிந்து கள்ளக்குறிச்சி மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர்  சதீஷ் தலைமையில் வட்டார மருத்துவ அலுவலர் சுரேஷ், சுகாதார ஆய்வாளர் சங்கரன் மற்றும் ஊழியர்கள் நேரில் வந்து தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டனர். தாசில்தார் சிவசங்கரன், பேரூராட்சி செயல் அலுவலர் செல்லப்பிள்ளை ஆகியோர் தலைமையில் வருவாய்த் துறை மற்றும் பேரூராட்சி  ஊழியர்கள் நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட பகுதியில் தடுப்பு கட்டைகள் அமைத்து தனிமை படுத்தினார்கள். தொடர்ந்து 2 நாட்களாக கிருமி நாசினி தெளித்தல், பரிசோதனை மற்றும் தடுப்பூசி போடும் பணி நடைபெற்றது. ஆனால் இந்தப் பணி முழுமை அடைந்ததாக தெரியவில்லை. 

இதற்கிடையே கொரோனா தொற்று அறிகுறி உள்ளவர்கள் பேரூராட்சியின் பல்வேறு பகுதிகளில் வசித்து வருகின்றனர். அந்த பகுதிகளில் இதுவரை எந்தவித முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை. குறிப்பாக நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளில் எச்சரிக்கை நோட்டீஸ் கூட ஒட்டவில்லை. இதனால் யார்? நோய் பாதிப்புக்குள்ளானவர்கள் என்பதை பொதுமக்கள் அறிந்துகொள்ள முடியவில்லை. மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் நகரில் உலா வருகிறார்கள். அதேபோல் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளிலும் கொரோனா நோயாளிகள் கட்டுப்பாட்டை மீறி வெளியே வந்து செல்வதாகவும் இதனால் தொற்று மேலும் பரவும் அபாயம் உள்ளதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக குறிப்பிட்ட பகுதியை ஆய்வு மேற்கொண்டு கொரோனா தொற்று பரவலை தடுக்க நடவடிககை எடுக்க வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Next Story