கரூர் மாவட்டத்தில் பதிவான 4 சட்டமன்ற தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடக்கம்


கரூர் மாவட்டத்தில் பதிவான 4 சட்டமன்ற தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடக்கம்
x
தினத்தந்தி 1 May 2021 6:29 PM GMT (Updated: 1 May 2021 6:29 PM GMT)

கரூர் மாவட்டத்தில் பதிவான 4 சட்டமன்ற தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது. ஒவ்வொரு சுற்றுவாரியாக முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.

கரூர்
வாக்கு எண்ணிக்கை
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த மாதம் 6-ந் தேதி நடந்தது. கரூர் மாவட்டத்தில் உள்ள அரவக்குறிச்சி, கரூர், கிருஷ்ணராயபுரம் (தனி), குளித்தலை ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்குப்பதிவு முடிந்ததும், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் அதனுடன் இணைந்த கட்டுப்பாட்டு கருவிகள் வாக்கு எண்ணும் மையமான தளவாப்பாளையம் எம்.குமராசாமி பொறியியல் கல்லூரிக்கு பலத்த பாதுகாப்புடன் எடுத்து செல்லப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டன.
இதனை தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. கரூர் மாவட்டத்தில் 4 தொகுதிகளுக்கும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவாகியுள்ள வாக்குகளை எண்ணுவதற்காகவும், தபால் வாக்குகள் எண்ணுவதற்கும் தனித்தனியாக மேஜைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் கரூர் மாவட்டத்தில் வாக்கு எண்ணிக்கை அலுவலர்கள் மற்றும் போலீசார் என 1083 பேரும் மற்றும் வேட்பாளர்கள், முகவர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
ஒவ்வொரு சுற்றாக முடிவுகள்
வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது. முதலில் தபால் வாக்குகள் காலை 8 மணிக்கு எண்ண ஆரம்பிக்கப்பட்டும், அதன் தொடர்ச்சியாக காலை 8.30 மணிக்கு மின்னணு முறையிலான தபால் வாக்குகள் மற்றும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவாகியுள்ள வாக்குகள் ஒவ்வொரு சுற்றாக எண்ணப்பட்டு, ஒவ்வொரு சுற்று முடிவுகளும் வேட்பாளர்கள் வாரியாக மின்னணு தகவல் பலகையில் அறிவிக்கப்படும்.  இறுதியாக மின்னணு வாக்குகள் மற்றும் தபால் எண்ணிக்கையை தொகுத்து சம்பந்தப்பட்ட வாக்கு எண்ணிக்கை பார்வையாளர் அனுமதி பெற்று, தேர்தல் நடத்தும் அலுவலரால் வெற்றி பெற்ற வேட்பாளரின் விவரம் அனைவரின் முன்பு அறிவிக்கப்படும். 
வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு வரும் அனைவரும் முககவசம் அணிந்தும், அடையாள அட்டையை அணிந்தும் வர வேண்டும்.

Next Story